கங்கையில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட 3 இளைஞர்களுக்கு சிறை தண்டனை.. நீதிபதி வேதனை...
உச்ச நீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான், நாட்டில் ஜனநாயக ரீதியிலான எதிர்ப்புகளுக்கும் கருத்து சுதந்திரத்திற்கும் இடமின்றி வரும் போக்கு அதிகரித்து வருவது குறித்து கடும் கவலை தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், வாரணாசியில் கங்கை ஆற்றில் படகு சவாரியின்போது இப்தார் நிகழ்ச்சியில் சிக்கன் பிரியாணி சாப்பிட்டதாக கூறி, 14 முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு மூன்று மாதங்கள் ஜாமீன் மறுக்கப்பட்ட சம்பவத்தை கடுமையாக சாடினார்.
சிக்கன் பிரியாணி சாப்பிடுவது ஒருபோதும் குற்றமாக இருக்க முடியாது என்றும், ஆற்றில் இறைச்சி எலும்புகளை வீசியதாக பொய் வழக்கு போட்டு இளைஞர்களைச் சிறையில் அடைப்பது வேதனையானது என்றும் அவர் குறிப்பிட்டார். சட்டப்பூர்வமான எளிய செயல்களை கூட குற்றச்செயல்களாக மாற்றும் போக்கு நாட்டில் அதிகரித்து வருவதாக அவர் எச்சரித்தார்.
விவாதமும் மாற்றுக்கருத்துகளுமே ஜனநாயகத்தின் உயிர்நாடி என்று குறிப்பிட்ட நீதிபதி புயான், அமைதியான முறையில் போராடும் உரிமையை மக்கள் இழந்து வருவதாகவும், நீதித்துறையும் அமைப்புகளும் மக்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
Edited by Siva
