வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: புதன், 22 ஏப்ரல் 2015 (18:51 IST)

பிராமணர்கள் மீது தாக்குதல்: தி.க.வை தடை செய்; இல்லையேல் தமிழகத்தில் குடியரசு தலைவர் ஆட்சி - சுப்பிரமணியசாமி

பிராமணர்கள் மீது திராவிடர் கழகத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளதாகக் கூறி, தி.க.வை தடை செய்ய வேண்டும். இல்லையேல், சட்டம்-ஒழுங்கு சீரழிந்துவிட்டதால் தமிழகத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசை, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
 
சென்னையில், பிராமணர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து சுப்பிரமணியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், பிராமணர்கள் வீடு புகுந்து, திராவிடர் கழகத்தினர் தாக்குதல் நடத்தி, பூணூலை அறுத்தெறிந்துள்ளனர். இந்து மத சின்னம் மீதான தாக்குதல் இது. இதுபோன்ற தாக்குதல்கள் நடக்கக் காரணம், தமிழகத்தில் திறமையற்ற ஆட்சி நடப்பதுதான்.
 
எனவே, இனிமேலும், இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால், அரசியல் சாசன பிரிவு 256ன் கீழ் தமிழக அரசை கலைத்துவிட்டு, குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்துவோம் என்ற உறுதியான எச்சரிக்கையை மத்திய அரசு விடுக்க வேண்டும். மேலும், திராவிடர் கழகத்தை, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் தடை செய்ய வேண்டும். அந்த அமைப்பை சேர்ந்த அனைவரையும் கைது செய்ய வேண்டும். இவ்வாறு சுப்பிரமணியசாமி கூறியுள்ளார்.
சென்னையில் பிராமணர்கள் தாக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேரும், திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை. திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.