1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : புதன், 11 மார்ச் 2015 (10:38 IST)

சூரிய சக்தி மூலம் இயங்கும் 'சோலார் இம்பல்ஸ்-2' விமானம் இந்தியா வந்தது

13 ஆண்டுகால உழைப்பில் முழுக்க முழுக்க சூரிய சக்தியால் இயங்கும் 'சோலார் இம்பல்ஸ் 2'  விமானம் குஜராத் மாநிலத்தில் தரையிறங்கியது.
 
சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஆண்ட்ரே போர்ஸ்பெர்க், பெர்னாட் பிக்காட் ஆகிய விமானிகள் சுமார் 13 ஆண்டுகள் உழைப்பில் முழுக்க முழுக்க சூரிய சக்தியால் இயங்கும் 'சோலார் இம்பல்ஸ் 2' என்ற விமானத்தை தயாரித்துள்ளனர்.
 
இந்த விமானம், சூரிய சக்தியை சேமித்து இரவிலும் பறப்பதற்கு ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சூரிய சக்தி விமானம் தனது 5 மாத கால உலகப் பயணத்தை சில தினங்களுக்கு முன்னர் அபுதாபி விமான நிலையத்தில் தொடங்கியது.
 
அபுதாபியில் இருந்து சென்ற இந்த விமானம் ஓமன் நாட்டில் உள்ள மஸ்கட் நகர விமான நிலையத்தில் முதல்கட்டமாக தரையிரங்கியது. பின் அங்கிருந்து புறப்பட்ட விமானம் சுமார் ஆயிரத்து 465 கி.மீ., தூரம் கடந்து இந்தியாவிற்கு வந்தது.
 
இம்பல்ஸ்-2 விமானம் நேற்று இரவு 11: 25 மணியளவில் குஜராத் மாநிலத்தில் உள்ள சர்தார் வல்லபாய்படேல் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.
 
தொடர்ந்து நான்கு நாட்கள் விமானம் அகமதாபாத்தில் நிறுத்தி வைக்கப்படுகிறது. பின்னர் வாரணாசி செல்லும் இவ்விமானம் அங்கிருந்து 16ஆம் தேதி மியான்மர் நாட்டிற்குச் செல்லவுள்ளது.
 
2,300 கிலோ எடையைக் கொண்ட இந்த விமானத்தை, 120 மணி நேரம் வரை தொடர்ச்சியாக இயக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.