வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Annakannan
Last Updated : சனி, 25 அக்டோபர் 2014 (21:26 IST)

வல்லபாய் பட்டேல் பிறந்த அக்டோபர் 31ஆம் தேதி, இனி 'தேசிய ஒற்றுமை தினம்'

சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளான அக்டோபர் 31ஆம் தேதியை ஒவ்வோர் ஆண்டும் தேசிய ஒற்றுமை தினமாக மத்திய அரசு அனுசரிக்க உள்ளது.
 
நம் நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக அமையும் விஷயங்களை எதிர்த்து நிற்க, நமக்குள் இருக்கும் உள்ளார்ந்த வலிமையையும் எதிர்த்து நிற்கும் திறனையும் உறுதி செய்ய, இந்த நாள் ஒரு வாய்ப்பாக அமையும்.
 
அனைத்து அரசு அலுவலகங்களிலும் பொதுத் துறை நிறுவனங்களிலும் பொது நிறுவனங்களிலும் தேசிய ஒற்றுமை தினத்தை அனுசரிக்கும் வகையில் உறுதிமொழி எடுக்கப்படும். மாணவர்கள் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் நிலைநிறுத்திப் போராடுவதற்குப் பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் உறுதிமொழி எடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
மத்திய அரசின் அமைச்சகங்களும் துறைகளும் மாநில அரசுகளும் யூனியன் பிரதேசங்களும் இந்நாளில் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.