வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 27 அக்டோபர் 2015 (12:49 IST)

ஆர்எஸ்எஸ் தொண்டர் போல் செயல்படுகிறார் உத்தர பிரதேச ஆளுநர்: சமாஜ்வாடி குற்றச்சாட்டு

உத்தர பிரதேச ஆளுநர் ராம்நாயக் ஆர்எஸ்எஸ் தொண்டர் போல் செயல்படுகிறார் என்று சமாஜ்வாடி கட்சியின் பொதுச் செயலாளர் ராம் கோபால் யாதவ் குற்றம் சாற்றியுள்ளார்.


 

 
சமாஜ்வாடி கட்சியின் பொதுச் செயலாளர் ராம் கோபால் யாதவ், ஆளுநர் ராம் நாயக்கை கடுமையாக தாக்கி கருத்து தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து ராம் கோபால் யாதவ் கூறுகையில், "இந்துத்வா அமைப்பினர் மதரீதியிலான செயல்பாடுகளில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் சமுதாயத்தின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் செயல்படுகின்றனர்.
 
இதையே ஆளுநர் சட்டம் – ஒழுங்கு சீர் குலைந்து விட்டதாக கூறுகிறார். சட்டம் – ஒழுங்கு சரியில்லை என்று சொல்லும் ஆளுநர் தாத்ரி சம்பவம் குறித்து கருத்து சொல்லாமல் மவுனமாக இருந்தது ஏன்?
 
தாத்ரி சம்பவத்துக்கு யார் காரணம் என்பதை அவர் ஆராய்ந்து பார்க்க வேண்டும். தாத்ரி சம்பவத்தில் யாருக்கு தொடர்பு உள்ளது என்று இந்த உலகத்துக்கே தெரியும்.
 
ஆளுநர் ராம் நாயக் ஆர்எஸ்எஸ் தொண்டர்போல் செயல்படுகிறார். அவரை நரேந்திர மோடி மத்திய அமைச்சராக நியமித்தால் அவரது மத கொள்கையை நிறைவேற்றிக் கொள்ளலாம். ஆளுநர் இப்போது மத்திய மந்திரி போல் நடந்து கொள்கிறார். இவரைப்போல் எந்த ஆளுநரும் நடந்து கொண்டது இல்லை" என்று ராம் கோபால் யாதவ் கூறியுள்ளார்.
 
வாஜ்பாய் ஆட்சிகாலத்தில் பெட்ரோலியத் துறை அமைச்சராக இருந்தவர் ராம்நாயக். தற்போது, உத்தர பிரதேச ஆளுநராக உள்ள இவர், அகிலேஷ் யாதவ் அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.
 
மேலும், ஆளுநருக்கும், மாநில அரசுக்கும் மோதல் ஏற்பட்டுவருவாக கூறப்படுகிறது. இந்நிலையில், மாநிலத்தின் பல்வேறு இடங்களில் நடந்த மோதல் சம்பவங்கள் குறித்து ஆளுநர் கருத்து தெரிவிக்கையில், "உத்தர பிரதேசத்தில் சட்டம் – ஒழுங்கின் நிலை மிகவும் மோசமாகி விட்டதாக குற்றம் சாட்டினார்." என்பது குறிப்பிடத்தக்கது.