செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Modified: சனி, 20 டிசம்பர் 2014 (10:26 IST)

ராபர்ட் வதேரா நில பேர விவகாரம் தொடர்பான முக்கிய ஆவணங்கள் மாயம்

சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா மீதான நில பேர புகார் தொடர்பான முக்கிய ஆவணங்கள் மாயமாகி விட்டதாக ஐ.ஏ.எஸ். அதிகாரி அசோக் கெம்கா குற்றம் சாற்றியுள்ளார்.
 
இது குறித்து அவர் ஹரியானா மாநில தலைமைச் செயலருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
 
அரசு கோப்புகளில் இருந்த ஆவணங்களின் முதல் இரண்டு பக்கங்கள் மாயமாகியுள்ளது தீவிரமாக விசாரிக்கப்பட வேண்டிய விஷயம். இத்தனை நாள் இருந்த ஆவணங்கள் திடீரென மாயமானது எப்படி?
 
தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு பொய்யானது என்பதை நிரூபிக்க வதேரா நீதிமன்றத்துக்கு சென்றிருக்க வேண்டும். ஆனால் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட குழு அவரை குற்றமற்றவர் எனத் தெரிவித்திருக்கிறது.
 
முந்தைய காங்கிரஸ் அரசு அந்தக் குழுவை எந்த அடிப்படையில் அமைத்தது என்பது குறித்த குறிப்புகள் அந்தக் கோப்புகளில் இருந்தன. தற்போது அது மாயமாகிவிட்டதால், அந்தக் குழுவில் இருந்த மூன்று பேர் எந்தத் தகுதியின் கீழ் தேர்வு செய்யப்பட்டார்கள் என்பதை விசாரிக்க முடியாது.
 
இதில் நடைபெற்ற முறைகேடுகளை மறைக்கவே அந்தப் பக்கங்கள் திருடப்பட்டுள்ளன. எனவே இது குறித்து வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் கெம்கா குறிப்பிட்டுள்ளார்.
 
இந்நிலையில், ஆவணங்கள் மாயமானது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று ஹரியாணா மாநிலத் தலைமைச் செயலர் பி.கே.குப்தா தெரிவித்துள்ளார்.
 
மேலும், நில பேரப் புகார் குறித்த ஆவணங்களில் இரண்டு பக்கங்கள் மாயமானது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அந்த ஆவணங்களை மீண்டும் தயாரிப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதில் யாருக்காவது தொடர்பு இருப்பது தெரிய வந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
 
டி.எல்.எஃப். நிறுவனத்துக்கு ராபர்ட் வதேரா, ஹரியாணாவில் சட்டவிரோதமாக நிலம் விற்பனை செய்ததாக கடந்த 2012 ஆம் ஆண்டு புகார் எழுந்தது. அப்போது அந்த மாநிலத்தில் பதிவுத் துறைத் தலைவராக இருந்த அசோக் கெம்கா இந்தப் புகார் குறித்து விசாரிக்குமாறு உத்தரவிட்டார்.
 
மேலும் ராபர்ட் வதேரா - டி.எல்.எஃப். இடையேயான நில விற்பனை ஒப்பந்தத்தை கெம்கா ரத்து செய்தார். இதையடுத்து அவரை மாநில அரசு பணியிட மாற்றம் செய்தது.
 
ராபர்ட் வதேரா மீதான புகார் குறித்து விசாரிக்க மூன்று நபர் குழுவை மாநில அரசு நியமித்தது. எந்தவிதமான முறைகேடுகளிலும் ராபர்ட் வதேரா ஈடுபடவில்லை என்று அந்தக் குழு அறிக்கை தாக்கல் செய்தது. நில ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்காக கெம்கா பிறப்பித்த உத்தரவு செல்லாது எனவும் அந்தக் குழு தெரிவித்தது.
 
இந்நிலையில், மூன்று நபர் ஆய்வுக் குழு எந்த அடிப்படையில் அமைக்கப்பட்டது என்ற விவரங்களை தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கெம்கா அண்மையில் கேட்டிருந்தார். ஆனால் அது குறித்த தகவல்கள் கோப்புகளில் மாயமாகிவிட்டதாக அவருக்கு பதில் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.