1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 13 ஆகஸ்ட் 2015 (12:20 IST)

மேகி நூடுல்ஸ் மீதான தடை நீக்கம் - மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு

நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் உணவுப்பொருள் தயாரிப்பான மேகி நூடுல்சிற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

 
சுவிஸ் நாட்டை சேர்ந்த ‘நெஸ்லே’ நிறுவனம் தயாரித்து, இந்தியாவில் விற்பனை செய்யும் மேகி நூடுல்ஸ் துரித உணவுப் பொருளில், உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் ரசாயன உப்பு அதிக அளவில் சேர்க்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
 
‘நெஸ்லே’ நிறுவனத் தயாரிப்பான ‘மேகி நூடுல்ஸ்’-ல் காரீயம்-ன் அளவு உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் மற்றும் நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அளவை விட அதிகமாக உள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
 
இதனைதொடர்ந்து பெரும்பாலான மாநிலங்களில் மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. பரிசோதனை முடிவின்படி, தில்லி, ஜார்கண்ட், ஜம்மு-காஷ்மீர், கேரளா, குஜராத், தமிழ்நாடு மற்றும் பீகார் மாநிலங்களில் மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது.
 
இந்நிலையில், நெஸ்லே இந்தியா நிறுவனம், மேகி நூடுல்சிற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனையடுத்து, இந்த வழக்கு மும்பை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
 
இது குறித்து மகாராஷ்டிர மாநில அரசு தரப்பு, ’நெஸ்லே நிறுவன தயாரிப்பான மேகி உணவுப் பொருளுக்கு மகாராஷ்டிர மாநில அரசு தடைவிதித்துள்ள நிலையில் அவற்றை பரிசோதனைக்கு உட்படுத்தாமல் வேகவேகமாக அந்த நிறுவனம் அழித்துவிட்டது’ என்று கூறியுருந்தது.
 
ஆனால், இந்த குற்றச்சாட்டை மேகி நிறுவனம் மறுத்தது. அந்த நிறுவனத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ’மேகி தயாரிப்பு ஆபத்தானதல்ல. மராட்டிய மாநில மேகி பாக்கெட்டுகள் அனைத்தும் தீங்கானவை அல்ல என்றும் சில பாக்கெட்டுகள் கெட்டுப் போயிருக்கலாம்’ என்றும் கூறியிருந்தார்.
 
இந்நிலையில், இன்று மேகி நூடுல்ஸ் மீதான தடையை நீக்கி மும்பை உயர்நீதிமன்றம் உத்தவிட்டது. மேலும், மேகி நூடுல்ஸின் தரம் குறித்த புதிய ஆய்வை நடத்தவும் உத்தரவிட்டுள்ளது.