1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : வியாழன், 23 ஏப்ரல் 2015 (15:33 IST)

செம்மரக் கடத்தல் பணத்தில் பங்களா கட்டி உல்லாச வாழ்க்கை வாழ்ந்த அகர்வால் நடிகை

செம்மரக் கடத்தலில் முக்கியமான நபர் ஒருவர், தெலுங்கு நடிகை ஒருவருக்கு ரூ.35 லட்சம் மதிப்புள்ள பங்களா கட்டி கொடுத்துள்ளார். அதில் இருவரும் உல்லாசமாக ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
 

 
ஆந்திர மாநிலம் திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆந்திர போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் 12 பேர் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
மேலும் இந்த சம்பவத்துக்கு தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
 
இதனையடுத்து ஆந்திராவில் இருந்து செம்மர கட்டைகள் கடத்துவதை தடுக்க ஆந்திர போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் சித்தூர் மாவட்டம், குடிபாலா மண்டலம் பெங்களூரு–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் குடிபாலா போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். போலீசார் காரை சோதனை செய்து கொண்டிருந்தபோது, காரில் இருந்த 6 பேர் தப்பி ஓடினர். இதனையடுத்து போலீசார் அவர்களை துரத்தி சென்று மடக்கி பிடித்தனர்.
 
அந்த காரில் 11 செம்மர கட்டைகள் இருப்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து போலீசார் காரையும், செம்மர கட்டைகளையும் பறிமுதல் செய்து, சித்தூர் வன அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சரவணன் (வயது 38), சுரேஷ், ஆனந்த், ஹரி உள்பட 5 பேரை கைது செய்தனர். காரை ஓட்டி வந்த டிரைவர் சந்திரா என்பவர் தப்பி ஓடி விட்டார். அவரை தேடி வருகிறார்கள்.
 
கைதான சரவணனிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் சென்னையைச் சேர்ந்தவர் என்பதும், அவரது தந்தை சந்திரன் தயாரிப்பில் ‘மன்னவரு’ என்ற தமிழ் படத்தில் சரவணன் நடித்துள்ளார் என்பதும் தெரியவந்தது. ஆனால் இந்த படம் இன்னும் வெளிவரவில்லை. இதனையடுத்து சென்னையில் உள்ள நடிகர் சரவணனின் 2 குடோன்களில் ஆந்திர போலீசார் சோதனை செய்தனர். அங்கிருந்து 165 செம்மர கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
 
இதுகுறித்து ஆந்திர மாநில போலீஸ் டி.ஜி.பி. ராமுடு செய்தியாளர்களிடம் கூறியதாவது:–
 
அடுத்த பக்கம்..

செம்மர கட்டைகள் கடத்தியதாக தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகர் சரவணன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஒரு படத்தில் நடித்துள்ளதோடு, தனது பினாமிகள் மூலமாக பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களை தயாரிக்க நிதி உதவி செய்துள்ளார்.
 
மேலும், தமிழ் மற்றும் தெலுங்கு நடிகைகள் பலருடன் இவருக்கு தொடர்பு உள்ளது. அவர்களுக்கு தனது சொந்த செலவில் ஆடம்பர பங்களாக்களையும், விலை உயர்ந்த கார்களையும் பரிசளித்து உள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
 
சரவணனின் வங்கி கணக்கு மூலமாக யாருக்கெல்லாம் பண பரிமாற்றம் நடந்துள்ளது என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறோம். இதில் பல முக்கிய புள்ளிகள், சினிமா பிரபலங்கள் சிக்குவார்கள் என்று தெரிகிறது.
 
செம்மர கட்டை கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்களில் பலர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தான். அவர்களில் பலர் சென்னையை மையமாக வைத்து தொழில் செய்து வந்துள்ளார்கள். சரவணனின் சகோதரர் லட்சுமணன் என்பவரும் ஒரு படத்தில் தயாரிப்பாளராக இருந்துள்ளார். அவரிடமும் விசாரணை நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
 
சரவணன் கொடுத்த தகவலின் பேரில் தப்பி ஓடிய ரவி, சண்முகம்  கைது செய்யப்பட்டனர்.  இவர்களின் குடோனில் இருந்து ரூ.5 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யபபட்டது. இதற்கிடையே ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த மஸ்தான் வலி, அவரது சகோதரர் சங்கர் நாயக் ஆகியோர் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.
 
இதையடுத்து மஸ்தான் வலியை போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் செம்மரக் கடத்தலில் கிடைத்த பணத்தின் மூலம் சினிமாபடம் தயாரிப்பில் ஈடபட்டதும், அவரது படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை நீத்து அகர்வாலை காதலியாக வைத்துக் கொண்டு தனிக்குடித்தனம் நடத்தியதும் தெரிய வந்தது.
 
மஸ்தான் வலி தெலுங்கில் ’பிரேம பிரயாணம்’என்ற பம் தயாரித்தார். அதில் நீத்து அகர்வால் கதாநாயகியாக நடித்துள்ளார். மஸ்தான் வலியிடம் மேலும் விசாரித்தபோது செம்மரக் கடத்தலில் நடிகை நீத்துவுக்கும் தொடர்பு இருப்பக தெரிவித்துள்ளார்.
 
மஸ்தான் வலி செம்மரக் கடத்தலில் கிடைத்த பணத்தை நடிகை நீத்துவிடம் கொடுத்து அவரது வங்கி கணக்கில் போட்டுள்ளார். பின்னர் வங்கி கணக்கில் இருந்து தனக்கு தேவைப்படும் போது தேவையான பணத்தை எடுத்து இருக்கிறார்.
 
இதையடுத்து போலீசார் மஸ்தான் வலி, நடிகை நீத்து அகர்வால் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் மஸ்தான் வலி கைது செய்யப்பட்டார். போலீசார் நடிகை நீத்துவை கைது செய்யச் சென்றபோது தலை மறைவாகி விட்டது தெரிய வந்தது. அவர் பெங்களூர் அல்லது மும்பையில் பதுங்கி இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். அவரை கைது செய்ய தனிப்படைகள் விரைந்துள்ளன. நடிகை நீத்துவுக்கு மஸ்தான் வலி ரூ.35 லட்சம் மதிப்புள்ள பங்களா கட்டி கொடுத்துள்ளார். அதில் இருவரும் உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.