வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வியாழன், 17 ஜூலை 2014 (12:31 IST)

டெல்லியில் ஆட்சியைப் பிடிக்க பாஜக குதிரை பேரம் நடத்தவில்லை - ராஜ்நாத் சிங் மறுப்பு

டெல்லியில் ஆட்சி அமைக்க பாஜக குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை என மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக முன்னாள் தலைவருமான ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
 
காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை உடைத்து டெல்லியில் ஆட்சியமைக்க முயல்வதாக பாரதிய ஜனதா கட்சியினர் மீது புகார் எழுந்துள்ளது.
 
இதுகுறித்து அரவிந்த் கெஜ்ரிவால், "ரூ.20 கோடி விலையில் பாஜக பல எம்.எல்.ஏ.க்களை வாங்க முயல்கிறது. எங்கள் எம்.எல்.ஏ.க்களை வாங்க முடியாமல் காங்கிரஸிடம் முயல்கிறது. மிகவும் தவறான முறையில் ஆட்சி அமைப்பது என்ன ஜனநாயகம்? இப்படி ஆட்சி அமைப்பவர்களால் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியுமா? இதில், பிரதமர் நரேந்திர மோடி அமைதி காப்பது ஏன்?" என ஆம் ஆத்மி தலைவரும், டெல்லியின் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாற்றியிருந்தார்.
 
இதற்கு பதிலளிக்கும் வகையில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், டெல்லியில் ஆட்சியமைக்க பாஜக குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை. மேலும், எந்த ஒரு சூழலிலும் அது போன்ற செயலில் பாஜக ஈடுபடாது என தெரிவித்துள்ளார்.
 
இதற்கிடையில், டெல்லியில் பாஜக ஆட்சி அமைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருவதை ஒட்டி, ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி துணை நிலை ஆளுநரை சந்திக்க அனுமதி கோரியுள்ளார்.
 
இது குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், "டெல்லி துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங்கை சந்திக்க அனுமதி கோரியுள்ளேன். அவரது பதிலுக்காக காத்திருக்கிறேன்" என பதிவு செய்துள்ளார்.