செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : வியாழன், 26 பிப்ரவரி 2015 (08:07 IST)

இன்று தாக்கல் செய்யப்படுகிறது ரயில்வே பட்ஜெட்

2015–16 ஆம் நிதி ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை, மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்கிறார்.

இது, நரேந்திர மோடி தலைமையிலான, பாஜக அரசின் முதல் முழுமையான ரயில்வே பட்ஜெட், மேலும் சுரேஷ் பிரபு தாக்கல் செய்யும் முதல் ரயில்வே பட்ஜெட்டும் ஆகும்.

முற்பகல் 11.25 மணிக்கு தனது விட்டிலிருந்து புறப்படும் ரயில்வே அமைச்சர், மதியம் 12 மணியளவில் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கலைத் தொடங்குவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
ரயில்வே துறை நிதி நெருக்கடியில் உள்ளதால், இன்று தாக்கல் செய்யப்படும் ரயில்வே பட்ஜெட்டில் பயணிகள் கட்டணம் அல்லது சரக்கு கட்டணம் இதில் ஏதாவது ஒன்றை ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு உயர்த்தலாம் எனத் தெரிகிறது.
 
ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தனது முதல் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார். ரயில்வே துறை நிதி நெருக்கடியில் உள்ளதால், அதன் வருவாயை பெருக்கும் திட்டங்களை அவர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
டீசல் விலை குறைந்துள்ளதால், பயணிகள் கட்டணம் குறைக்கப்படுமா என்ற கேள்வியை ரயில்வே இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா ஏற்கனவே நிராகரித்துள்ளார்.
 
டீசல் விலை குறைந்திருந்தாலும், மின்சாரம் விலை 4 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் எரிபொருள் செலவு சரிகட்டப்படும். பயணிகள் கட்டணம் ஏற்கனவே மிக குறைவாக இருப்பதகவும், அதை ரயில்வே அமைச்சர் மேலும் குறைக்க மாட்டார் எனவும் கூறப்படுகிறது.
 
பொருளாதாரம் மேம்பட்டுள்ளதால், சரக்கு கட்டணத்தை ரயில்வே அமைச்சர் உயர்த்த வாய்ப்பு உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
ரயில்வே துறையில் தற்போது ரூ. 1 லட்சத்து 57 ஆயிரத்து 883 கோடி ரூபாய் மதிப்பில் 676 திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் 317 திட்டங்களை மட்டுமே தற்போது முடிக்க முடியும்.
 
மீதமுள்ள 359 இன்னும் முடிவடையவில்லை. இதனால் இதற்கான செலவு ரூ.1 லட்சத்து 82 ஆயிரம் கோடியாக அதிகரிக்கும் எனத் தெரிகிறது. சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தனியார் முதலீடுகளை ஈர்க்க திட்டம் வகுக்கலாம் என்று கூறப்படுகிறது.
 
இந்த பட்ஜெட்டில் புதிய ரயில்கள் அதிகளவில் அறிவிக்கப்படமாட்டாது எனவும், முக்கியமான இடங்களில் புதிய வழித்தடங்களை அமைப்பது, இரட்டை ரயில் பாதை அமைப்பது, நிறைவடையும் நிலையில் உள்ள மின்மயமாக்க திட்டங்கள் ஆகியவற்றுக்கு மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் கூறப்படுகிறது. 
 
ரயில்வே துறையை மேம்படுத்த 20 ஆயிரம் கோடி முதலீடு தேவை என நிதி அமைச்சகத்திடம் சுரேஷ் பிரபு கேட்டுள்ளார். கடந்தாண்டு ரூ.45 ஆயிரம் கோடி முதலீட்டில் ரயில்வே பட்ஜெட் போடப்பட்டது. இதில் 66 சதவீதத்தை மத்திய அரசு அளித்தது, மீதத் தொகை ரயில்வே வருவாயில் திரட்ட முடிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.