தொகுதி மறுவரையரை மசோதாவை ஆதரிப்பவர்கள் எட்டப்பர்கள்.. திமுகவை மறைமுகமாக தாக்கினாரா ராகுல் காந்தி?
மாமல்லபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாவட்ட தலைவர்களுக்கான பயிற்சி முகாமின் நிறைவு விழாவில் கலந்துகொண்டு பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மத்திய பாஜக அரசு மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
குறிப்பாக, தற்பொழுது விவாத பொருள் ஆகியிருக்கும் தொகுதி மறுவரையறை மசோதாவை எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது தனிநபரோ ஆதரித்தாலும், அது தமிழ்நாட்டுக்குச் செய்யும் பச்சைத் துரோகம் என்று அவர் ஆக்ரோஷமாக எச்சரித்துள்ளார். தமிழக மக்களின் வாக்குரிமையைக் கணிசமாகக் குறைத்து, மாநிலத்தின் அரசியல் பலத்தைப் பறிக்கும் சதித் திட்டத்துடனேயே பாஜக இந்த மசோதாவைத் தீட்டி வருவதாக அவர் குற்றம்சாட்டினார்.
தமிழ்நாட்டின் எதிர்காலத்தின் மீதும், மக்களின் உரிமைகள் மீதும் நடத்தப்படும் இந்தத் தாக்குதலுக்கு யார் துணை நின்றாலும் அவர்களை இந்த நூற்றாண்டின் நவீன எட்டப்பர்கள் என்று கடுமையாக விமர்சித்த ராகுல் காந்தி, தமிழர்கள் யாரும் இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று கேட்டுக்கொண்டார்.
மேலும், நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்துத் தமிழ்நாட்டு மற்றும் தேசியக் கட்சிகளும் கட்சி பேதங்களைக் கடந்து ஒன்றுபட்டு நின்று இந்தத் தொகுதி மறுவரையறை மசோதாவை முழுமையாகத் தோற்கடிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். மாமல்லபுரத்தில் அவர் விடுத்த இந்த எச்சரிக்கை அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva
