வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வியாழன், 28 மே 2015 (14:02 IST)

விவசாயிகளின் குறைகளைக் கேட்க தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி

தமிழக விவசாயிகளை சந்தித்துக் குறைகளை கேட்டறிவதற்காக, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அடுத்த மாதம் தமிழகம் வருகை தர உள்ளதாக காங்கிரஸ் வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.
 

Rahul Gandhi
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பல மாநிலங்களுக்குச்  சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
 
மோடி அரசு கொண்டு வந்துள்ள நிலம் கையகப்படுத்தும் சட்டம், விவசாயிகளுக்கு எதிரானது என்பது பற்றி தனது சுற்றுப்பயணத்தின் போது விவசாயிகளுடன் கலந்து பேசி வருகிறார்.
 
இந்நிலையில் அடுத்தக் கட்ட பயணமாக ராகுல் காந்தி தமிழகம் வர இருக்கிறார். அடுத்த மாதம் 15 ஆம் தேதிக்குப் பிறகு அவர் தமிழகம் வருகிறார்.
 
தமிழகம் வரும் ராகுல் காந்தியின் சுற்றுப்பயணம் மற்றும் விவசாயிகள் கூட்டத்துக்கான ஏற்பாடுகளை செய்வது தொடர்பாக, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் வருகிற 3 ஆம் தேதி தமிழக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
 
தமிழகத்திலும் விவசாயிகள் பல பிரச்சனைகளை எதிர் நோக்கி இருக்கிறார்கள்.
 
கெயில் இந்தியா நிறுவனம் ரூ.340 கோடி மதிப்பீட்டில் கொஞ்சி, குட்டநாடு, பெங்களூர், வழியாக மங்களூர் வரை பைப் லைனில் கேஸ் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளது. இந்த வழித்தடம் கோயம்புத்தூர், திருப்பூர், சேலம், ஈரோடு, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி வழியாக கொண்டு செல்ல முடிவு செய்தனர்.
 
ஆனால் இதற்கு அந்த பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அந்த பகுதியில் விவசாயிகள் கடையடைப்பு உள்பட பல கட்ட போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.
 
இந்நிலையில் தமிழகம் சுற்றுப்பயணம் வரும் ராகுல் காந்தி, திருச்சி, தஞ்சை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களுக்கு சென்று அந்த பகுதி விவசாயிகளை சந்தித்து அவர்களது பிரச்சனைகளை நேரில் அறிய திட்டமிட்டுள்ளார்.
 
தேர்தல் நெருங்கும் நேரத்தில் ராகுல் காந்தி விவசாயிகள் பிரச்சனைகளை கையிலெடுத்துள்ளது  காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தைக் கூட்டியுள்ளது.