வைகோ புத்தக வெளியீட்டு விழாவில்ர் ராகுல் காந்தியுடன் தவெக அமைச்சர்... இந்தியா கூட்டணியில் இணைய வாய்ப்பா?
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மூன்று தசாப்த கால நாடாளுமன்ற வரலாற்று சிறப்புமிக்க உரைகளின் தொகுப்பான நாடாளுமன்றத்தில் வைகோ என்ற புத்தகம் டெல்லியில் மிகச்சிறப்பாக வெளியிடப்பட்டது.
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இந்த புத்தகத்தை வெளியிட, தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா, சமாஜவாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் எம்.ஏ.பேபி, விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் சுப்ரியா சுலே உள்ளிட்ட முக்கிய இந்தியா கூட்டணி தலைவர்கள் பலரும் இவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இந்த விழாவில் தமிழக அரசியல் களத்தின் புதிய திருப்பங்கள் எதிரொலித்தன. குறிப்பாக, திமுக கூட்டணியிலிருந்து விலகி தவெகவுக்கு ஆதரவளித்து வரும் மதிமுகவின் இந்நிகழ்வில், தவெக சார்பில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் கலந்துகொண்டது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் ஜோசப் விஜய் நேரில் கலந்துகொள்ள முடியாத காரணத்தால், அவரின் பிரதிநிதியாக அமைச்சர் ராஜ்மோகன் பங்கேற்றதும், விழா மேடையில் ராகுல் காந்தி மற்றும் அகிலேஷ் யாதவுடன் விஜய்யின் புகைப்படம் கம்பீரமாக வைக்கப்பட்டிருப்பதும் பலத்த கவனத்தை பெற்றுள்ளது.
திமுக கூட்டணியிலிருந்து விலகியதை அடுத்து, தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் தவெகவை இணைக்கும் தீவிர முயற்சிகள் நடைபெற்று வருவதாக பரவி வரும் தகவல்களுக்கு இந்நிகழ்வு வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது. இந்த அரசியல் நகர்வுகள் தமிழ்நாட்டின் எதிர்கால அரசியல் சமன்பாடுகளை மாற்றக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Siva
