வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : சனி, 25 ஏப்ரல் 2015 (18:00 IST)

மத்திய அரசை எதிர்த்து இந்தியா முழுவதும் ராகுல் காந்தி நடைபயணம்

நிலம் கையகப்படுத்தும் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் மத்திய அரசை கண்டித்து நாடு முழுக்க காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்ள உள்ளார்.

சமீபத்தில் பாஜக கொண்டுவந்த நிலம் கையகப்படுத்தும் சட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் டெல்லியில் பிரம்மாண்ட பேரணியும், பொதுக்கூட்டமும் நடந்தது. இதில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டு பேசினார்கள். பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த ஏராளமான விவசாயிகள் இதில் கலந்து கொண்டனர்.
 
இந்த கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை கடுமையாக விமர்சித்தார். மோடி அரசு விவசாயிகளுக்கு எதிராக நடந்து கொள்கிறது என்றும் பேசினார். இது காங்கிரசாரிடம் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
 
விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகள், தற்கொலை விவகாரங்கள் மத்திய அரசு முடிவால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து விவசாயிகளிடம் எடுத்துக் கூற காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இதற்காக பல்வேறு மாநிலங்களில் பிரச்சாரம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
 
தற்போது விவசாயிகள் பிரச்சனை சூடுபிடித்துள்ளது. ஏற்கெனவே 56 நாள் ஓய்வுக்குப் பிறகு நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்று பேசிய ராகுல் காந்தி மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார். ஏற்கனவே பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வரும் விவசாயிகளை நிலம் கையகப்படுத்தும் சட்டம் என்னும் கோடாரியால் அரசு வெட்டுகிறது என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.
 
நேற்று முன்தினம் ராகுல் காந்தி கவுரிகுண்டுவில் இருந்து 16 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரையாக சென்று கேதர்நாத் கோவிலில் சாமிதரிசனம் செய்தார். இதையடுத்து, காங்கிரசை பலப்படுத்துவதற்காக பல்வேறு மாநிலங்களுக்கு ராகுல் காந்தி நடைபயணம் செல்லுவார் என்று கூறப்பட்டது.
 
இந்த நிலையில், விவசாயிகளுக்கு ஆதரவாக ராகுல் காந்தி தலைமையில் பல்வேறு மாநிலங்களுக்கு பாதயாத்திரை செல்ல காங்கிரஸ் தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். அப்போது விவசாயிகள் பிரச்சனையில் மத்திய அரசு எதிராக நடந்து கொள்வது குறித்து பிரச்சாரம் செய்வது என்றும் முடிவு செய்துள்ளனர்.

சமீபத்தில் பெய்த பருவம் தவறிய மழை மற்றும் பலத்த காற்று காரணமாக மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பலத்த பயிர் சேதம் ஏற்பட்டது. இந்த மாநிலங்களுக்கு ராகுல் காந்தி பாதயாத்திரை செல்கிறார்.
 
வருகிற அக்டோபர் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள பீகார், மாநிலத்துக்கும் ராகுல் காந்தி செல்ல இருப்பதாகக் கூறப்படுகிறது. வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் மொத்தம் 1000 கிலோ மீட்டர் தூரம் இந்த பாதயாத்திரை நடைபெறும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
‘ஏழைகளுக்கு எதிரான மோடி அரசு. விவசாயிகள் விரோத மோடி அரசு’ என்ற கோஷத்துடன் இந்த நடைபயணம் நடைபெற உள்ளது. அப்போது பாதிக்கப்பட்ட விவசாயிகளையும், ஏழைகளையும் ராகுல் காந்தி நேரில் சந்திக்கிறார்.
 
இந்த நடைபயணத்தின் போது மத்திய அரசு ஏழைகளுக்கும், பொதுமக்களுக்கும் எதிராக எப்படி நடந்து கொள்கிறது என்பது பற்றி பிரச்சாரமும் செய்யப்படுகிறது. இந்த பாதயாத்திரை மூலம் விவசாயிகளிடமும் பொதுமக்களிடமும் காங்கிரஸ் செல்வாக்கு உயரும் என்று அந்த கட்சியின் முக்கிய தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
 
இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான கமல்நாத், விரைவில் ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் ஆவார் என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தற்போது மிகவும் சுறுசுறுப்பாகவும் அறிவுக் கூர்மையாகவும் செயல்படுகிறார். ராகுல் காந்தி விரைவில் காங்கிரஸ் தலைவர் ஆவார் என்று நம்புகிறேன். இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி வரிசையில் அவரை காண்கிறேன்.
 
தலைவராவதற்கு நல்ல நேரம் கெட்ட நேரம் என்று எதுவும் இல்லை. ஆனால் ராகுல் காந்தியால் காங்கிரஸ் எழுச்சி பெறப்போகும் நேரம் இது. ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவரானாலும் சோனியா காந்தி ஓய்வுபெற மாட்டார். அவர் கட்சியின் ஆலோசகராக செயல்படுவார்" என்றார்.