வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ilavarasan
Last Modified: புதன், 22 ஏப்ரல் 2015 (15:38 IST)

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இணையதள சேவைகளை தாரை வார்க்க அரசு திட்டம்: ராகுல்காந்தி குற்றச்சாட்டு

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இணையதள சேவைகளை தாரை வார்க்க அரசு திட்டமிடுவதாக ராகுல்காந்தி குற்றம் சாட்டினார்.
 
நிலம் கையகப்படுத்தும் மசோதாவைத் தொடர்ந்து, இணையதள சேவையில் நிகர நடுநிலை என்ற மத்திய அரசின் கொள்கைக்கும் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
 
இணையதள சேவையில் நடுநிலை கொள்கை குறித்து பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி ஒத்திவைப்பு நோட்டீஸ் கொடுத்து இருந்தார். அதன்படி இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி நேரம் முடிந்ததும் இணையதள சேவையில் நடுநிலை கொள்கை பற்றி விவாதம் நடந்தது.
 
விவாதத்தில் ராகுல்காந்தி பேசியதாவது:–
 
இது ஒரு முக்கியமான பிரச்சனை. நாட்டில் ஒவ்வொருவரும் இணைய தளத்தை பயன்படுத்துகிறார்கள். ஒவ்வொருவரும் இணையதள நடுநிலை குறித்து சமூக வளைதளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த அரசு இணைய தள சேவைகளை தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்க விரும்புகிறது.
 
இது தொடர்பாக மத்திய தொலை தொடர்பு ஆணையத்தின் (டிராய்) ஆலோசனைகளை நிறுத்த வேண்டும். இணையதள நடுநிலை தொடர்பாக சட்ட வழிமுறைகள் உள்ளன. டிராயின் முடிவை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.
 
அவருக்கு பதில் அளித்து தகவல் தொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:–
 
அனைவருக்கும் இணைய தள சேவை வழங்க வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் கனவு. ஒட்டுமொத்த நாடே அதை பயன்படுத்துகிறது. மத்திய அரசு எந்த கார்ப்பரேட் நிறுவனத்துக்கும் உடன்படாது. எந்த நெருக்கடிக்கும் அடிபணியாது. இது சம்பந்தமாக டிராய் முடிவு எடுத்து சிபாரிசு செய்துள்ளது. ஆனால் மத்திய அரசுதான் இதில் இறுதி முடிவு எடுக்கும்.
 
பிரதமர் மோடி இந்தியாவை டிஜிட்டல் மயமாக்குவது பற்றி பேசி வருகிறார். மக்கள் அனைவரும் இன்டர்நெட் சேவை கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். டுவிட்டர் போன்றவைகளை முந்தைய காங்கிரஸ் அரசுதான் தடுத்து வைத்து இருந்தது என்று அவர் கூறினார்.