வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ilavarasan
Last Modified: வெள்ளி, 17 ஜூலை 2015 (16:29 IST)

மோடியின் 56 அங்குல மார்பை 5.6 அங்குலமாக குறைப்போம்: ராகுல்காந்தி ஆவேசம்

பிரதமர் மோடி மீது கடும் தாக்குதலை தொடுத்துள்ள காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, நிலம் கையகப்படுத்தும் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற காங்கிரஸ் அனுமதிக்காது என்றும், தேர்தலின்போது தன்னை தைரியமானவராக காட்டிக்கொண்ட மோடியின் 56 அங்குல மார்பை 5.6 அங்குலமாக குறைப்போம் என்றும் ஆவேசமாக கூறியுள்ளார்.
 
கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது பிரசாரம் செய்த மோடி, இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக ஆக்கவும், பாதுகாப்பாக வைத்திருக்கவும் 56 அங்குல மார்பு வேண்டும் என்று கூறியிருந்தார். அதாவது, திடகாத்திரமான மனமும், உடல் பலமும் தேவை என்ற அர்த்தத்தில் அவ்வாறு பேசி இருந்தார். 
 
இதனை குறிப்பிட்டே ராகுல் தற்போது மேற்கண்டவாறு பேசியுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இன்று காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் பேசிய ராகுல், " நாடாளுமன்றத்தில் நிலம் கையகப்படுத்தும் மசோதாவை நிறைவேற்ற விடமாட்டோம். விவசாயிகளிடமிருந்து ஒரு அங்குல நிலத்தைக் கூட அரசாங்கம் எடுத்துக்கொள்ள அனுமதிக்க மாட்டோம். இன்னும் 6 மாதங்களில் (மோடியின்) 56 அங்குல மார்பு 5.6 அங்குலமாக சுருங்கிவிடும். 
 
இந்த நாட்டின் விவசாயிகளும், காங்கிரஸ் கட்சியும் மற்றும் இந்த நாட்டு மக்களும் 56 அங்குல மார்பை 5.6 அங்குல மார்பாக நிச்சயம் குறைத்துவிடுவார்கள். பிரதமரான பின்னர் மோடி விவசாயிகளை மறந்துவிட்டார். விவசாயிகளுக்கு அவர் பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார். ஆனால் எல்லாமே வெத்துவேட்டாக ஆகிவிட்டது. 
 
நான் இங்கே பேசுவது இந்த நாட்டின் மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடுதான். பிரதமர் மோடி அரசின் அதிகாரங்களையெல்லாம் தனது கையிலேயே குவித்து வைத்துள்ளார். மத்திய அரசில் ஒரே ஒரு அமைச்சர் மட்டுமே உள்ளார்" என்று மேலும் கூறினார்.