’கற்பழிக்கப்பட்ட சிறுமியை தற்கொலை செய்ய மிரட்டல்’ - அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை


லெனின் அகத்தியநாடன்| Last Modified ஞாயிறு, 14 ஆகஸ்ட் 2016 (15:26 IST)
உத்தரப்பிரதேச மாநில அமைச்சர் அசம்கான் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று, புலந்த்சாஹரில் கும்பல் வல்லுறவுக் கொடுமைக்கு உள்ளான சிறுமி உச்சநீதிமன்றத்திற்கு சென்றுள்ளார்.
 
 
உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், கடந்த ஜூலை 30ஆம் தேதி ஷாஜகான்பூருக்கு காரில் சென்று கொண்டிருந்தனர்.
 
இந்த கார், தில்லி - கான்பூர் தேசிய நெடுஞ்சாலையில் தோஸ்துபூர் கிராமத்தை நெருங்கிய நிலையில், புலந்த்சாஹர் என்ற இடம் அருகே ஒரு கும்பல் இரும்புக் கம்பியால் காரின் கண்ணாடியைத் தாக்கி, அவர்களை மறித்தது.
 
பின்னர், காரில் இருந்த ஆண்களை கட்டிப்போட்டு விட்டு, 35 வயது பெண் மற்றும் அவரது 14 வயது மகள் ஆகிய இருவரையும் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது.
 
நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இச்சம்பவம் தொடர்பாக தற்போது சிபிஐ விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 
இதனிடையே புலந்த்சாஹர் சம்பவம் நடந்த சமயத்தில், அதுபற்றி கருத்து தெரிவித்த உத்தரப்பிரதேச மாநில அமைச்சர் அசம்கான், தேர்தல் வர இருப்பதையொட்டி எதிர்க்கட்சிகள் செய்த அரசியல் சதிதான் புலந்த்சாஹர் சம்பவம் என்று குறிப்பிட்டார்.
 
இது அப்போதே கடும் கண்டனத்திற்கு உள்ளானது. இந்நிலையில், அசம்கானின் பேச்சுக்காக அவர் மீதும், நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர் மீதும் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடுமாறு, பாதிக்கப்பட்ட சிறுமி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
 
சிறுமியின் தந்தை பேட்டி:
 
பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை பேட்டி ஒன்றும் அளித்துள்ளார். அதில், ‘நாங்கள் எங்கள் பகுதியில் கடந்த 18 வருடங்களாக வசித்து வருகிறோம்; ஆனால் தற்போதுதான் எங்களுக்கு மிரட்டல் வருகிறது.
 
எங்களை அடுத்த 3 மாதங்களுக்கு ஒன்றும் செய்ய மாட்டார்களாம்; ஆனால் அதற்குள் நாங்களாகவே தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்கள்; எனவே, நாங்கள் இந்த பகுதியை விட்டு வெளியேறவும், மகளின் பள்ளிக்கூடத்தை மாற்றவும் எண்ணியிருக்கிறோம்’ என்று கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :