பங்குச்சந்தையில் 11 நாளில் பணம் இரட்டிப்பு.. ரூ.12.31 கோடி ஏமாந்த 75 வயது டாக்டர்..
புனேவை சேர்ந்த 75 வயது மருத்துவர் ஒருவர், பங்குச்சந்தையில் முதலீடு செய்து 11 நாட்களில் பணத்தை இரட்டிப்பாக்கலாம் என்ற ஆசையில் சுமார் 12.31 கோடி ரூபாயை சைபர் மோசடி கும்பலிடம் இழந்துள்ளார். இந்த சம்பவம் மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜனவரி மாதம், பாதிக்கப்பட்ட மருத்துவருக்கு தெரியாத எண்ணில் இருந்து அதிக லாபம் தரும் முதலீட்டு திட்டம் குறித்து குறுஞ்செய்தி வந்துள்ளது. அதன் பிறகு அவர் "VIP Stock 24" என்ற வாட்ஸ்அப் குழுவில் சேர்க்கப்பட்டார். அங்கு ஒரு சர்வதேச நிறுவனத்தின் பெயரில் இயங்கிய போலி வர்த்தக செயலியை பதிவிறக்கம் செய்யுமாறு மோசடி கும்பல் அவரை வற்புறுத்தியுள்ளது. அந்த செயலியில் பணம் முதலீடு செய்யப்பட்டவுடன், பொய்யான லாப கணக்குகளை காட்டி அவரை நம்ப வைத்துள்ளனர்.
மார்ச் 7 முதல் மார்ச் 18 வரையிலான காலகட்டத்தில் மட்டும், 8 வெவ்வேறு வங்கி கணக்குகளுக்கு மொத்தம் 12.31 கோடி ரூபாயை அந்த மருத்துவர் பரிமாற்றம் செய்துள்ளார். ஒரு கட்டத்தில் அவர் முதலீடு செய்ய தயங்கியபோது, அவருடைய சொத்துக்களை பறிமுதல் செய்துவிடுவோம் என அக்கும்பல் மிரட்டியுள்ளது.
இறுதியில், வாக்குறுதி அளித்தபடி 54 கோடி ரூபாய் லாபம் கிடைக்காததை கண்டு தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மருத்துவர், சைபர் போலீஸில் புகார் அளித்தார். தற்போது இது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுத் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
Edited by Siva
