வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Modified: புதன், 15 ஜூலை 2015 (00:27 IST)

அரவிந்தர் ஆசிரமம் மீது நடவடிக்கை கோரி புதுச்சேரி சகோதரிகள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம்

அரவிந்தர் ஆசிரமத்தின் மீது புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து புதுச்சேரி சகோதரிகள் மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் துவக்கியுள்ளனர்.
 

 
புதுவை அரவிந்தர் ஆசிரமத்தில், பீகாரைச் சேர்ந்த பிரசாத் சாந்திதேவி தம்பதியினர் மற்றும் இவர்களின் மகள்கள் ராஜஸ்ரீ, அருணாஸ்ரீ, ஜெயஸ்ரீ, நிவேதிதா, ஹேமலதா ஆகியோரும் ஆசிரமத்தில் தங்கி சேவை செய்து வந்தனர்.
 
இந்நிலையில், ஆசிரம நிர்வாகத்தின் மீது சகோதரிகள் பாலியல் புகார் கூறினர். இதனால், இவர்களை ஆசிரம நிர்வாகம் ஆசிரமத்தை விட்டு வெளியேற நிர்வாகம் உத்தரவிட்டது. ஆனால், அவர்கள் விடுதியை காலிசெய்ய மறுத்து நீதி மன்ற உதவியை நாடினர். ஆசிரமத்தைவிட்டுச் சகோதரிகள் வெளியேற 6 மாத காலக்கெடுவை நீதிமன்றம் விதித்தது. இந்தக் காலக்கெடு முடிந்த பிறகும் அவர்கள் விடுதியில் இருந்ததால், காவல்துறை உதவியோடு வெளியேற்றப்பட்டனர்.
 
இதனால், மனமுடைந்த சகோதரிகள் பெற்றோருடன் கடந்த ஆண்டு டிசம்பரில் கடலில் குதித்துத் தற்கொலைக்கு முயன்றனர். இதில், அவரது தாயார் சாந்திதேவி, ராஜஸ்ரீ, அருணாஸ்ரீ ஆகியோர் கடலில் மூழ்கி பலியானார்கள். ஆனால், பிரசாத், சகோதரிகள் நிவேதிதா, ஜெயஸ்ரீ, ஹேமலதா ஆகிய 4 பேர் மீட்கப்பட்டனர்.
 
இந்நிலையில், தங்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்து வெளியேற்றிய ஆசிரமம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேசிய மனித உரிமைகள் ஆணையம், புதுவை கவல்துறையிடம் புகார் அளித்தனர். ஆனால், காவல்துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
 
மேலும், ஆசிரமத்திலிருந்து வெளியேற்றப்பட்ட சகோதரிகளுக்கு உணவு, உடை, தங்குமிடம் ஆகியவற்றைத் தருவதாகப் புதுவை அரசு அறிவித்திருந்தது. ஆனால், இதுவரை அரசு எந்த உதவியையும் செய்யவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.
 
இந்நிலையில், ஆசிரம நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, புதுவை தலைமை தபால் நிலையம் முன்பு, நிவேதிதா, ஹேமலதா ஆகியோர் சாகும் வரை உண்ணாவிரதத்தைத் தொடங்கியுள்ளனர்.
 
இந்தப் போராட்டத்திற்குத் திக, தமிழர் தேசிய இயக்கம், மக்கள் உரிமை கூட்டமைப்பு, தமிழ் தமிழர் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளது.