வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Updated : சனி, 23 ஜூலை 2016 (17:03 IST)

பிரதமரின் மவுனம் எங்களின் வேதனை

இதுவரை இந்த தேசம் பதிமூன்று பிரதமர்களை கண்டு இருக்கிறது. அவர்கள் யாரிடமும் இல்லாத ஓர் சிறப்பு அம்சம் நமது தற்போதையப்  பிரதமருக்கு உண்டு. 


 

 
அந்த அம்சம் அவர் தகவல் தொடர்பு ஊடகங்களையும் சமூக வலைத்தளங்களையும் சிறப்பாக பயன்படுத்துவது தான்.  மன் கீ பாத் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் தொடர்ச்சியாக உரையாடி வருகிறார். நேற்று கோரக்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல்நாட்டு விழாவில் பேசிய பிரதமர் நாட்டின் பண வீக்கம் விவாதிக்க படும் அளவுக்கு தனது அரசின்  திட்டங்கள் விவாதிக்கப்படுவது இல்லை என குறிப்பிடுகிறார்.  வருத்தம் தான் பிரதமர் அவர்களே. ஆனால் இந்த தேசத்தில் சிறுபான்மை மற்றும் தலித் மக்கள் மீது தொடர்ச்சியாக உமிழப்படும் வார்த்தைகளுக்கு தங்களின் பதில் மவுனம். கர்பவாசி முதல் முஸ்லீம்கள் இல்லாத இந்தியா வரையிலான விமர்சனங்களுக்கு தங்களின் பதில் மவுனம்.
 
தாங்கள் குஜராத்தின் வளர்ச்சியைக்  காட்டி இந்தியாவின் ஆட்சிக்  கட்டிலை அமர்தீர்கள். அந்த குஜராத்தின்  உனா மாவட்டத்தில் இறந்த மாட்டின் தோலை வைத்திருந்த தலித்கள் மீது நடந்தப்பட்ட தாக்குதல்கள் அதனை தொடர்ந்து அங்கு நடந்து வரும் போராட்டங்களுக்கு தங்களின் பதில் மவுனம்.
 
தாத்திரில் ஓர் முஸ்லிம் பெரியவர் மாட்டு இறைச்சி வைத்து இருந்ததாகக் கொல்லப்பட்டாரே அப்போதும் உங்களின் பதில் மவுனம். முஸ்லிம்களுக்கு வாக்கு உரிமை கூடாது என்று சுப்ரமணிய சாமி சொன்ன போது தங்களின் பதில் மவுனம். கருணையின் வடிவமான அன்னை தெரசா தேசத்தை கிருத்துவமயமாக முயன்றார் என்று ஆதித்யநாத் சொன்ன போதும் தங்களின் பதில் மவுனம்.
 
ஹரியானாவில் மாட்டு இறைச்சி வைத்து இருந்ததாக இரண்டு முஸ்லீம் இளையர்கள் சிறைப்படுத்தப்பட்டு மாட்டு கழிவுகளை சாப்பிட வைத்த கொடுமைகளைக் கண்டு இந்த தேசம் அதிர்ந்த போதும் உங்களின் பதில் மவுனம்.
 
ராமரின் பிள்ளைகள் ஆட்சி வேண்டுமா? வேசிகளின் பிள்ளைகள் ஆட்சி வேண்டுமா  நீராஜன் ஜோதி சொன்ன போதும்  தங்களின் பதில் மவுனம். தங்களை ஆதரிக்காதவர்கள் பாகிஸ்தான் செல்லலாம் என்று கிரிராஜ் சிங் சொன்ன போதும்  தங்களின் பதில் மவுனம். மாட்டு இறைச்சி விருந்து கொடுத்தார் என்பதற்காக காஷ்மீர் சட்ட மன்ற உறுப்பினர் ரஷீத் அஹ்மது தாக்கப்பட்ட போதும் உங்களின் பதில் மவுனம்.
 
வளர்ச்சிப் பற்றி பேசும் தாங்கள் ஏன் வெறுப்பு அரசியல் மற்றும் மாட்டிறைச்சி அரசியலுக்கு கண்டனம் தெரிவிக்கவில்லை. இந்த தேசம் உங்களிடம் எதிர்பார்ப்பது இந்த கண்டனங்களைதான் பிரதமர் அவர்களே!. இதுபோன்ற வெறுப்பு அரசியல் மற்றும் மாட்டிறைச்சி அரசியலுக்கு எதிராக ஊடகங்களை அழைத்து பேச வேண்டும்

தங்களின் தொடர் மவுனம் எங்களின் வேதனை பிரதமர் அவர்களே. 
  


இரா .காஜா பந்தா நவாஸ் ,
பேராசிரியர் 
இயந்திரவியல் துறை ,
சத்தியபாமா பல்கலைக்கழகம் ,
சென்னை