1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : சனி, 8 அக்டோபர் 2016 (14:50 IST)

பெண்கள் நெற்றியில் பச்சை குத்திய போலீஸ்: 23 ஆண்டுகளுக்கு பிறகு நீதி

பஞ்சாப் மாநிலத்தில் 1993 ஆம் ஆண்டு பிக்பாக்கெட் தொழிலில் ஈடுப்பட்டதாக கைது செய்யப்பட்ட பெண்கள் நெற்றியில் ‘பிக்பாக்கெட்’ என்று பச்சை குத்தியுள்ளனர். 23 ஆண்டுகளுக்கு இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.


 

 
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் கடந்த 1993-ம் ஆண்டு பிக்பாக்கெட் தொழிலில் ஈடுபட்டதாக நான்கு பெண்களை காவல்துறையினர் கைதுசெய்து அவர்கள் நெற்றியில் ‘பிக் பாக்கெட்’ என்று பச்சை குத்தி கொடுமைப்படுத்தினர்.
 
4 பெண்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, அவர்கள் முக்காடுகளை நீக்கி அவர்களுக்கு நடந்த கொடுமையை அம்பலப்படுத்தினர். அதோடு தாங்கள் சீக்கிய பொற்கோயிலில் தரிசனம் செய்துவிட்டு, சொந்த ஊருக்கு செல்ல பஸ் நிலையத்தில் காத்திருந்தபோது காவல்துறையினர் அவர்களை கட்டாயப்படுத்தி பிடித்து சென்று சிறையில் ஒருவாரம் கொடுமைப்படுத்தியதாக நீதிபதியிடம் கூறினர்.
 
பாதிக்கப்பட்ட பெண்கள் அவர்களுக்கு நேர்ந்த அநீதிக்கு நியாயம் கேட்டு பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து தன்னையும் கட்சிக்காரராக இணைத்து கொண்டதுடன் பஞ்சாப் மாநில அரசு, அமிர்தசரஸ் நகர போலீஸ் சூப்பிரண்ட் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தது.
 
மேலும் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்ற உத்தரவுவிட வேண்டும் என்று மனித உரிமை ஆணையம் வலியுறுத்தியது. இதையடுத்து பாட்டியாலா நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் 23 ஆண்டுகளாக இந்த வழக்கு நடைப்பெற்று வந்தது.
 
நேற்றுதான் இந்த வழக்குல் தீர்ப்பு வழங்கப்பட்டது. அமிர்தசரஸ் நகர போலீஸ் சூப்பிரண்ட்டாக பதவிவகித்த சுக்தேவ் சிங் சின்னா, ராம்பாக் நகர போலீஸ் நிலைய முன்னாள் சப்-இன்ஸ்பெக்டர் நரிந்தர் சிங் மல்லி, மற்றும் உதவி சப்-இன்ஸ்பெக்டர் கன்வால்ஜித் சிங் ஆகியோரை குற்றவாளிகள் என்று அறிவித்து, அவர்களுக்கு முன்றாண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது.