1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : சனி, 22 நவம்பர் 2014 (12:30 IST)

மோடி சம்மதித்தால் சேர்ந்து வாழத் தயார்: யசோதாபென்

நரேந்திர மோடி சம்மதித்தால் சேர்ந்து வாழத் தயார் என்று அவரது மனைவி யசோதாபென் விருப்பம் தெரிவித்துள்ளார்.
 
பிரதமர் நரேந்திர மோடி திருமணம் ஆனவரா? இல்லையா? என்று நீண்ட காலமாக யாருக்கும் தெரியாமல் இருந்தது. நாடாளுமன்றத் தேர்தலில் குஜராத் மாநிலம் வதோதரா தொகுதியில் மோடி போட்டியிட்டார். அப்போது, வேட்புமனுவுடன் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், மனைவி என்ற இடத்தில் யசோதாபென் என்று மோடி குறிப்பிட்டு இருந்தார். அதன்பிறகுதான், அவர் திருமணம் ஆனவர் என்று அனைவருக்கும் தெரிய வந்தது.
 
மோடிக்கும் யசோதாபென்னுக்கும் கடந்த 1968 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின்போது அவர்களுக்கு 20 வயது கூட ஆகவில்லை. திருமணம் ஆன ஓரிரு மாதங்களிலேயே மனைவியை விட்டு மோடி பிரிந்து விட்டார். ஆசிரியையாகப் பணியாற்றி ஓய்வு பெற்று விட்ட 62 வயதான யசோதாபென், குஜராத் மாநிலம் மெசானா மாவட்டம் ஐஸ்வர்வாடா கிராமத்தில் தன்னுடைய இரு சகோதரர்களுடன் வசித்து வருகிறார்.
 
மோடி பிரதமராகப் பதவி ஏற்றபின் யசோதாபென்னுக்குக் கருப்பு பூனைப்படை பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், யசோதாபென் ஒரு தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ''பிரதமர் நரேந்திர மோடி தயார் என்றால், அவருடன் சேர்ந்து வாழ விரும்புகிறேன். அவர் என்னை அழைத்துச் செல்ல வந்தால், அவருடன் செல்லத் தயாராக உள்ளேன்" என்று கூறியுள்ளார்.