சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம் போல் பிற திட்டங்களுக்கும் நேரடி மானியம்: பிரதமர் மோடி

சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம் போல் பிற திட்டங்களுக்கும் நேரடி மானியம்: பிரதமர் மோடி
Mahalakshmi| Last Updated: சனி, 17 ஜனவரி 2015 (10:48 IST)
டெல்லியில் நடைபெற்ற சர்வதேச வர்த்தக உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில்,

நாட்டின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, வரி விதிப்பு, மற்றும் எரிசக்தி ஆகிய பல்வேறு துறைகளில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள அரசு தீர்மானித்துள்ளது. இதன்தாக்கத்தால் பொருளாதாரத்தில் அசுர வளர்ச்சியை எட்ட முடியும். மேலும் இதற்கேற்ற விதிமுறைகளிலும், நடைமுறைகளிலும் தேவையான மாற்றங்களை அரசு செய்து வருகிறது. மின்சக்தி துறையிலும் சீர்திருத்தம் கொண்டு வரப்படும்.

மேலும் காப்பீடு, ரியல் எஸ்டேட், பாதுகாப்பு, ரெயில்வே ஆகிய துறைகளில் அன்னிய முதலீட்டுக்கு இருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தி வைக்கப்பட்டுள்ளது. கட்டுமான வசதிகளில் ரெயில்வே, சாலை போக்குவரத்து ஆகிய துறைகளில் அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. சமையல் எரிவாயு சிலிண்டர் வாடிக்கையாளர்களுக்கு நேரடி மானியத் தொகையை செலுத்தும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் இத்திட்டத்தை போல், மற்ற திட்டங்களுக்கும் நேரடி மானியம் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. அரசின் மானியங்கள் அனைத்தும் ஏழைகளுக்கு கிடைக்க வேண்டும். மேலும் நுகர்வோருக்கு வழங்கும் உணவுப்பொருட்களை தேசிய அளவில் பொதுவினியோக திட்டத்தின் கீழ் கணினி மயமாக்கப்படும் என்று கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :