செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 10 ஆகஸ்ட் 2016 (08:51 IST)

’பாலிவுட் சினிமா வசனமா?’ - மோடியை கலாய்த்த யெச்சூரி

'தலித் மக்களை தாக்காதீர்கள் முதலில் என்னைத் தாக்குங்கள்' என்று மோடி கூறியது பாலிவுட் சினிமா வசனம் போல உள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கிண்டல் செய்துள்ளார்.
 

 
இது குறித்து மாநிலங்களவையில் செவ்வாயன்று கேள்வி நேரத்தின்போது பேசிய யெச்சூரி, ”தலித் மக்களை தாக்காதீர்கள் முதலில் என்னைத் தாக்கட்டும் என்று மோடி கூறியது, இத்தாலிய மன்னராட்சிக் காலத்து ராஜதந்திரியான மாக்கியவெல்லியின் கருத்தை நினைவுபடுத்துகிறது.
 
மாக்கியவெல்லி, மக்களுக்கு முதலில் மோசமானவற்றை அனுபவித்திட கொடுப்பார்; பின்னர் அந்த மோசமானவற்றை அவரே கட்டுப்படுத்தி, மக்களுக்கு நல்லது செய்பவராகி விடுவார்.
 
மோடியின் வேண்டுகோள் பாலிவுட் வசனம் போல் உள்ளது. அதாவது சினிமாவில் தனது மகனை கொல்ல வரும்போது தாய், ‘சுடுவதாக இருந்தால் என்னை சுடுங்கள், எனது மகனை விட்டுவிடுங்கள்’ என்பது போல் உள்ளது.
 
தலித்களை தாக்காதீர்கள் என்று பிரதமர் கூறுகிறார்; இதன் பொருள் தலித் அல்லாதவர்களை, அதாவது மதச்சிறு பான்மையினரைத் தாக்குவதற்கான லைசென்சா?
 
ஏனெனில் பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் முதலில் கொல்லப்பட்டது தாத்ரியில் வசித்த இக்லாக் என்ற முஸ்லிம்தான். எனவே பிரதமர் முதலில் அவைக்கு வந்து, சட்டத்தை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தீர்மானகரமாக கூறவேண்டும்” என்று கூறியுள்ளார்.