இந்திய வரைபடத்தில் தவறு.. சுட்டிக்காட்டிய வீராங்கனைக்கு பிரதமர் மோடி பாராட்டு...
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் போது, இந்திய வரைபடம் தவறாக சித்தரிக்கப்பட்டிருந்ததை உடனடியாகச் சுட்டிக்காட்டி எதிர்ப்பு தெரிவித்த குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினாவின் தேசப்பற்றைப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
போட்டிகள் நடைபெற்ற வளாகத்தில் உள்ள உணவகம் ஒன்றில் இந்தியாவின் வரைபடத்தில் வடகிழக்கு மாநிலங்கள் விடுபட்டிருந்ததை லவ்லினா கவனித்தார். உடனே உணவக நிர்வாகத்திடம் தனது கண்டனத்தை பதிவு செய்த அவர், அந்த தவறை உடனடியாக திருத்தக் கோரினார். அவரது எதிர்ப்பை ஏற்றுக்கொண்ட நிர்வாகமும் உடனடியாக மன்னிப்பு கோரி வரைபடத்தை மாற்றியது.
இந்நிலையில், காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய வீரர்களை சந்தித்து பேசிய பிரதமர் மோடி, லவ்லினா காட்டிய விழிப்புணர்வை வெகுவாகப் பாராட்டினார். வீரர்களுடனான சந்திப்பின்போது, 'அந்த உணவகத்தில் என்ன நடந்தது?' என்று பிரதமர் அன்புடன் விசாரிக்க, லவ்லினா அந்த நிகழ்வை சிரித்துக்கொண்டே விவரித்தார்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, வரைபடத்தைத் திருத்துமாறு லவ்லினா உறுதியுடன் குரல் கொடுத்ததைச் சுட்டிக்காட்டி, அந்தச் செயல் பொதுமக்களால் நீண்ட காலம் நினைவில் கொள்ளப்படும் என்று தெரிவித்தார். 75 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று நாட்டின் புகழைச் சேர்த்ததுடன், வெளிநாட்டில் இந்தியாவின் இறையாண்மையைக் காக்கும் வகையில் லவ்லினா காட்டிய விழிப்புணர்வு பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
Edited by Siva
