வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ashok
Last Modified: வியாழன், 5 நவம்பர் 2015 (18:37 IST)

தங்க முதலீட்டுத் தொடர்பான 3 திட்டங்களை மோடி இன்று தொடங்கிவைத்தார்

அசோகச் சக்கரம் பொறிக்கப்பட்ட தங்க நாணயம், தங்க டெபாசிட் திட்டம் மற்றும் தங்கப் பத்திரத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இன்று அறிமுகப்படுத்தி வைத்தார்.


 
 
டெல்லியில் இன்று நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி 5 மற்றும் 10 கிராம் தங்க நாணயங்களையும் 20 கிராம் எடையுள்ள தங்க கட்டியும் வெளியிட்டார். பின்னர் பேசிய அவர் "நம்நாட்டில் பயன்படுத்தப்படாமல் இருக்கும் சுமார் 20 ஆயிரம் டன் தங்கத்தை வெளிக் கொண்டு வர இந்த திட்டங்கள் உதவும் என்றும் ஆண்கள் பெயரிலேயே பெரும்பாலான சொத்துக்கள் உள்ள நிலையில், பெண்களின் ஒரே சொத்தாக தங்கம் இருந்து வருவதாகவும் வங்கியில் தங்கத்தை மக்கள் டெபாசிட் செய்ய முன்வர வேண்டும்" எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
 
மேலும், தங்கம் அடிப்படையிலான 3 புதிய முதலீட்டுத் திட்டங்களால் 20 ஆயிரம் டன் தங்கம் வெளிக்கொண்டு வர இந்த திட்டங்கள் உதவும் என்றும் வங்கிகளில் 5 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் வரை பணம் பரிவர்தனை நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.
 
அரசு சார்பில் வெளியிடப்படும் தங்க நாணயத்தில் ஒரு பக்கம் அசோகச் சக்கரமும், மறுபக்கம் மகாத்மா காந்தி படமும் இடம்பெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது
 
இந்த நாணயங்களை போலியாக தயாரிக்க இயலாத வகையிலும் எளிதில் மறுசுழற்சி செய்யக் கூடியது போன்ற சிறப்பம்சங்களை இந்நாணயங்கள் கொண்டுள்ளதாகவும் இவை மத்திய அரசு அமைப்பான எம்எம்டிசியின் விற்பனைய நிலையங்களில் கிடைக்கும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.