1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: சனி, 25 அக்டோபர் 2014 (16:05 IST)

'தூய்மை இந்தியா' திட்டத்துக்கு உதவிய ஊடகங்களுக்கு நன்றி: நரேந்திர மோடி பாராட்டு

'தூய்மை இந்தியா' திட்டத்தை மக்களிடம் எடுத்துச் செல்வதில் ஊடகங்களின் பங்கு முக்கியமானது. எழுதுகோலை துடைப்பமாக மாற்றி இத்திட்டம் குறித்து மக்கள் மத்தியில் அறியாமையை நீக்கி விழிப்புணர்வை ஏற்படுத்திய ஊடகங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
 
பிரதமராக பதவியேற்ற பின்னர் முதன்முறையாக டெல்லியில் இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட நரேந்திர மோடி, ஊடகங்களை வெகுவாக பாராட்டினார். தூய்மை இந்தியா திட்டத்தை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல ஊடகங்கள் பேருதவி செய்ததாக நன்றி தெரிவித்தார்.
 
டெல்லியில் பாஜக தலைமையகத்தில் பாஜக தலைவர் அமித் ஷா, மோடி - செய்தியாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார். பல்வேறு ஊடகங்களில் இருந்து செய்தியாளர்கள், ஆசிரியர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
 
நிகழ்ச்சியில் மோடி பேசியதாவது, "பாஜகவில் எனது ஆரம்ப காலத்தில், கட்சியின் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சிகளுக்காக இருக்கைகளை வரிசைப்படுத்தும் பணியை செய்திருக்கிறேன். அப்போது எல்லாம், செய்தியாளர்களிடம் சாதாரணமாக பேசுவேன். அந்த நாட்கள் எனக்கு இப்போது நினைவுக்கு வருகின்றன.
 
ஊடகங்களுடனான உறவை வலுப்படுத்த விரும்புகிறேன். ஊடகங்களுடன் நேரடி தொடர்பில் இருப்பது மிகவும் அவசியம். ஊடகங்களில் வெளியாகும் செய்திகளால் மக்கள் வெறும் தகவல்களை மட்டுமே பெறுவதில்லை, சில நேரங்களில் நல்ல கொள்கைகளையும் அவர்கள் பெறுகிறார்கள். அப்படித்தான், தூய்மை இந்தியா திட்டம் குறித்து ஊடகங்கள் வெளியிட்ட செய்தி மக்கள் மத்தியில் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. எல்லாவற்றையும் அரசாங்கமே செய்ய முடியாது மக்கள் பங்களிப்பும் தேவை என உணர்த்தியுள்ளது.
 
இது ஊடகத்தின் வலிமை. தேசத்துக்கு தொண்டாற்றும் வகையில், எழுதுகோல்களை துடைப்பமாக மாற்றிய ஊடகங்களுக்கு நன்றி. ஊடகங்களில் வரும் செய்திகளில் 80 சதவீதம் அரசை விமர்சிப்பதாக உள்ளன. உங்களுடைய விமர்சனங்கள் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன" என்றார்.