கைரேகை மூலம் UPI பரிவர்த்தனை.. QR கோடு மூலம் ஏடிஎம்-இல் பணம் எடுக்கலாம்.. 2 புதிய வசதிகள்.. முழு விவரங்கள்..!
இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை நிறுவனமான Paytm, தனது பயனர்களுக்காக Biometric முறையில் UPI பணப்பரிவர்த்தனை செய்யும் வசதியையும், கார்டு இல்லாமலேயே ஏடிஎம்-மில் பணம் எடுக்கும் வசதியையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
ரிசர்வ் வங்கியின் புதிய பாதுகாப்பு விதிமுறைகளுக்கு இணங்க இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இனி பயனர்கள் ஒவ்வொரு முறையும் PIN டைப் செய்ய வேண்டிய அவசியமில்லை. அதற்கு பதிலாக, செல்போனில் உள்ள கைரேகை அல்லது Face ID மூலமாகவே பாதுகாப்பாக பணத்தை அனுப்ப முடியும்.
ஒரு முறை பயோமெட்ரிக் பரிவர்த்தனைக்கு அதிகபட்சமாக 5,000 ரூபாய் வரை வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பயோமெட்ரிக் தரவுகள் பயனரின் மொபைலில் மட்டுமே சேமிக்கப்படும் என்பதால் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.
மேலும், டெபிட் கார்டு இல்லாமலேயே ஏடிஎம் இயந்திரங்களில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்து பணம் எடுக்கும் வசதியையும் பேடிஎம் வழங்குகிறது. இதில் ஒரு முறைக்கு 10,000 ரூபாய் வரை பணம் எடுக்கலாம். இந்த புதிய தொழில்நுட்பங்கள் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை மேலும் எளிமையாகவும், பாதுகாப்பாகவும் மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Siva