1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : திங்கள், 3 ஆகஸ்ட் 2015 (10:33 IST)

நாடாளுமன்ற முடக்கத்திற்கு சோனியா காந்தியே முழுப் பொறுப்பு: நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

நாடாளுமன்றத்தின், குளிர்க்கால கூட்டத்தொடர் முழுமையாக முடக்கப்படுமானால் அதற்கான முழுப் பொறுப்பையும் சோனியா காந்திதான் ஏற்க வேண்டும்  என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
 
இது குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "கடந்த 2010 ஆம் ஆண்டும் எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்ற குளிர்க்கால கூட்டத்தொடர் இதேபோன்று முடக்கப்பட்டது.
 
அதன் மூலம், 2 ஜி ஊழல் உள்ளிட்ட ஊழல்கள் வெளிப்பட்டன. 2 ஜி விவகாரத்தில் பிரதமருக்கு தெரியாமல் பல பரிவர்த்தனைகள் நடைபெற்றது அம்பலமானது.
 
இது குறித்து, நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்தவேண்டும் என்று நாங்கள் (பாஜகவினர்) போராட்டம் நடத்தினோம்.
 
ஆனால், லலித் மோடி விவகாரத்தில் இதைப்போன்ற சட்டமீறல் ஏதுவும் இல்லை. ஆனாலும், இது குறித்து நாமாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கேட்டுக் கொண்டது.
 
இந்த கோரிக்கையை அரசு ஏற்றுக் கொண்டது. ஆனால், முதலில் ராஜினாமா, பிறகுதான் விவாதம் என்று கூறும் அளவுக்கு காங்கிரஸ் அதிர்ச்சியளிக்கும் விதமாக குழப்பமடைந்துள்ளது.
 
நாடாளுமன்ற சபாநாயகரின் இருக்கையை நோக்கி அமளியில் ஈடுபடுகின்றனர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் கண்களுக்கு எதிரிலேயே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.
 
நாடாளுமன்றத்தின், குளிர்க்கால கூட்டத்தொடர் முழுமையாக முடக்கப்படுமானால் அதற்கான முழுப் பொறுப்பையும் சோனியா காந்திதான் ஏற்க வேண்டும்." என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.
 
பல்வேறு சட்ட திருத்த மசோதாக்களை நிறைவேற்றும் நோக்கில் தொடங்கிய நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் லலித் மோடி விவகாரம் மற்றும் வியாபம் ஊழல் தொடர்பான சர்ச்சைகளை எழுப்பி வரும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட்டு வருகின்றனர் எனபது குறிப்பிடத்தக்கது.