வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ilavarasan
Last Modified: புதன், 30 ஜூலை 2014 (19:18 IST)

நாடாளுமன்ற உணவகத்தில் வழங்கப்படும் உணவு சுகாதாரமானதாக இல்லை - எம்.பி.கள் புகார்

நாடாளுமன்ற உணவகத்தில் வழங்கப்படும் உணவு சுகாதாரமானதாக இல்லை என்றும், அதை உட்கொண்ட எம்.பி.க்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்படுவதாகவும் மாநிலங்களவையில் எம்.பி.க்கள் புகார் எழுப்பினர்.
 
இதுகுறித்து ஐக்கிய ஜனதா தள உறுப்பினர் கே.சி. தியாகி புதன்கிழமை கேள்வி நேரத்தின்போது பேசுகையில், "நாடாளுமன்ற உணவகத்தில் உணவருந்தும் எம்.பி.க்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்படுகிறது. சமாஜவாதி கட்சி உறுப்பினர்களான ராம் கோபால் யாதவ் மற்றும் ஜெயா பச்சன் ஆகியோர் சமீபத்தில் இதனால் பாதிக்கப்பட்டனர்.
 
இது, நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களை அமைதியாக வைத்திருக்க திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள சதியாகும்' என்றார்.
 
நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சரான வெங்கையா நாயுடு, இந்த விவகாரத்தை கவனத்தில் கொள்ளுமாறு மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே. குரியன் அறிவுறுத்தினார்.
 
அதற்கு "இது குறித்து உணவக ஊழியர்களிடம் தெரிவித்துள்ளேன்' என்று வெங்கையா நாயுடு கூறினார்.
 
சமாஜவாதி உறுப்பினர் ஜெயா பச்சன் கூறுகையில், "நாடாளுமன்ற உணவகத்தில் பழைய உணவுகள் வழங்கப்படுகின்றன. அங்கு உணவருந்திய பிறகு உடல் நலக்குறைவு ஏற்பட்டது' என்றார்.
 
காங்கிரஸ் உறுப்பினர் ராஜீவ் சுக்லா கூறுகையில், "காலை 6 மணிக்கு தயாரிக்கப்படும் உணவு இரவு வரை வழங்கப்படுகிறது. நாடாளுமன்ற சமையலறையை மூடியதை அடுத்தே இப்பிரச்ன எழுந்தது' என்றார்.
 
நாடாளுமன்ற வளாகத்தில் இருந்த சமையலறை, கூட்டத்தொடர் நடைபெறும்போது எம்.பி.க்கள், பணியாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் என சுமார் 8,000 பேருக்கு உணவு தயாரிக்கும் கொள்ளளவு கொண்டது.
 
சமையல் எரிவாயு சிலிண்டர்களால் தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறி கடந்த 2012 ஆம் ஆண்டு அந்த சமையலறை அகற்றப்பட்டது.