வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: சனி, 3 மே 2014 (17:43 IST)

இலங்கை வழியாக தீவிரவாதிகள் ஊடுருவல் - இல.கணேசன் சொல்கிறார்

இந்தியாவை சீர்குலைக்க பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாத அமைப்புகள் இலங்கையிலிருந்து தமிழகம் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவுகிறார்கள் என்று பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், ஒரு உளவுத்துறை அதிகாரியைப் போல கூறியுள்ளார். இவருக்கு தனிப்பட்ட முறையில் எங்கிருந்து, எப்படி இந்த தகவல்கள் வருகின்றன என்பதுதான் அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.
L.Ganesan - BJP
திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய இல.கணேசன் கூறியதாவது:-
 
இலங்கை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக மூன்று மாதங்களுக்கு முன்பாகவே தெரிவித்தேன். சில தினங்களுக்கு முன்பாக பயங்கரவாதி ஜாகிர் உசேன் கைது செய்யப்பட்டிருப்பது நான் சொன்ன குற்றச்சாற்று உண்மை என்று ஊர்ஜிதமாகியுள்ளது.
 
தீவிரவாதிகள் ஊடுருவலை தடுப்பதற்கான முயற்சியை மத்திய - மாநில அரசுகள் இணைந்து மேற்கொள்ள வேண்டும். சென்னையில் நடந்த குண்டு வெடிப்பு மோடியை குறிவைத்து நரேந்திர மோடியின் பிரச்சாரத்தின் போது பீதியை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக நடந்த சதித் திட்டமாக பாஜக கருதுகிறது.
 
மோடி பிரதமரானவுடன் தீவிரவாத பயிற்சி இலங்கையில் நடைபெறுவது தடுக்கப்படும். தேச விரோத சக்திகளை ஒடுக்கும் போது மத்திய, மாநில அரசுகள் என்றோ மாறுப்பட்ட கருத்துக்களை கொண்ட கட்சிகள் என்றோ, பாகுபாடுகள் இன்றி சேர்ந்து செயல்படவேண்டும். இது போன்ற வெடிகுண்டு தாக்குதல் இனிமேல் நடக்கக்கூடாது.
 
பாஜக அணியின் மீது மக்கள் கொண்டிருக்கின்ற ஆதரவு தேர்தல் முடிவுகளில் தெரியும். தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் சிறப்பாக இருந்தாலும் பணப்பட்டுவாடாவை தடுக்கின்ற நடவடிக்கைகளில் சில குறைபாடுகள் இருந்தன. ஆணையத்தின் தேர்தல் நடைமுறைகளில் உள்ள குறைபாடுகள் களையப்பட்டால் இன்னும் சிறப்பாக தேர்தல் நடத்த முடியும் என்று இல.கணேசன் பேசினார்.