1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 14 ஜூன் 2016 (17:51 IST)

இந்தியாவை விட நாங்க நல்லவங்க!.. - பாகிஸ்தான் மூத்த அதிகாரி சர்டிஃபிகேட்

அணுசக்தி குழுமத்தில் உறுப்பினராக சேரும் விஷயத்தில் இந்தியாவை விட பாகிஸ்தானுக்கு வலுவான தகுதிகள் உள்ளது என்று பாகிஸ்தானின் மூத்த வெளியுறவுத்துறை ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் கூறியுள்ளார்.
 

 
அணுசக்தி விநியோக குழு எனப்படும் என்எஸ்ஜி குழுவில் 48 நாடுகள் உள்ளன. அணுமின் நிலையங்களுக்கு தேவையான யுரேனியத்தை இந்த குழுவில் இடம்பெற்றிருக்கும் நாடுகள் தங்களுக்குள் தடையின்றி விநியோகம் செய்து வருகின்றன. இதர நாடுகளுக்கு விற்பனை செய்வது இல்லை.
 
இந்நிலையில் என்எஸ்ஜி குழுவில் இணைய இந்தியா நீண்ட காலமாக முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதற்கு அணுஆயுத பரவல் தடை சட்டத்தில் கையெழுத்திட வேண்டும். ஆனால் இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடவில்லை. அது, இந்தியாவின் நீண்டகால கொள்கை முடிவாகும்.
 
இருப்பினும் பொறுப்பான, நம்பகமான அணுசக்தி நாடு என்ற அடிப்படையில் என்எஸ்ஜி குழுவில் இணைய இந்தியா முயற்சித்து வருகிறது. இந்தியாவை போன்று பாகிஸ்தானும் அணுசக்தி குழுமத்தில் சேர ஆர்வம் காட்டிவருகிறது.
 
இந்நிலையில், பாகிஸ்தான் அணுசக்தி குழுமத்தில் சேர்வது தொடர்பாக பாகிஸ்தானின் மூத்த வெளியுறவுத்துறை ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த போது, "அணுசக்தி குழுமத்தில் சேர அடிப்படை சார்ந்த அணுகுமுறையில் பாகிஸ்தான் பல நாடுகளிடம் படிப்படியாக ஆதரவை திரட்டி வருகிறது" என கூறினார்.
 
மேலும் அணு சக்தி குழுமத்தில் உறுப்பினராக சேரும் விஷயத்தில் இந்தியாவை விட பாகிஸ்தானுக்கு வலுவான தகுதிகள் உள்ளது என்றும், இந்தியாவை விட பாகிஸ்தான் நம்பகத்தன்மை உள்ள நாடு என்றும் கூறினார்.