வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: செவ்வாய், 20 மே 2014 (11:28 IST)

நரேந்திர மோடியை வரவேற்க பாகிஸ்தான் தயாராக இருக்கிறது - பாக். தூதர் அறிவிப்பு

‘இந்திய பிரதமராக பொறுப்பேற்க இருக்கும் நரேந்திர மோடியை வரவேற்க பாகிஸ்தான் தயாராக உள்ளது’ என்று பாகிஸ்தான் தூதர் டெல்லியில் தெரிவித்தார்.
 
இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித் நேற்று டெல்லியில் இந்திய பத்திரிகையாளர் சங்க கூட்டத்தில் பேசியதாவது:-
 
பாகிஸ்தானுக்கு விருந்தினராக வர இருக்கும் நரேந்திர மோடியை வரவேற்க நாங்கள் (பாகிஸ்தான்) தயாராக இருக்கிறோம். எங்களது பிரதமர் நவாஸ் ஷெரீப் ஏற்கனவே பாகிஸ்தானுக்கு வருமாறு நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
 
அவரது பாகிஸ்தானின் வருகையினால் இருநாடுகளுக்கும் இடையே அமைதி-ஒற்றுமை ஏற்படும் என எதிர்பார்க்கிறேன். மேலும் இருநாடுகளுக்கிடையே நீண்டகாலமாக உள்ள பல்வேறு பிரச்சனைகளை அவர் தீர்த்து வைக்க பரஸ்பர ஒத்துழைப்பு அளிப்பார் என ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
 
இருநாடுகளுக்கும் இடையே கடந்த காலத்தில் நடந்த மோசமான நிலைமைகளில் இருந்து மாறுபட்டு இரு நாடுகளும் பரஸ்பர ஒத்துழைப்புடன் பேச்சு நடத்துவதற்கு பாகிஸ்தான் தலைவர்கள் தயாராக உள்ளனர். விரைவில் விரிவான பேச்சுவார்த்தை தொடங்கும் என்று எதிர்பார்க்கிறோம். இரு ஜனநாயக நாடுகளும் பகைமையை மறக்க வேண்டும். இருதரப்பில் எடுக்கப்படும் தவறான எந்த முடிவையும் மக்கள் ஏற்க மாட்டார்கள் என்பதுதான் கடந்த கால வரலாறாக உள்ளது.
 
பாகிஸ்தானில் பொறுப்பேற்றுள்ள புதிய அரசாங்கமானது அமைதிக்குதான் அதிமுக்கியத்துவம் அளித்துள்ளது. எங்களது வெளிநாட்டு கொள்கையில் நாங்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பது அமைதிக்குதான். இரு நாடுகளுக்கும் இடையே அமைதி, ஒற்றுமையை ஏற்படுத்துவதுதான் எங்களது தலையாய கடமையாக உள்ளது. கடந்த காலத்தில் நடந்த பேச்சுவார்த்தைகளை போல் அல்லாமல் இரு தரப்பிலும் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தையை நடத்தும் பணிகளில் எதிர்காலத்தில் இருநாடுகளும் ஈடுபட வேண்டும்.
 
இவ்வாறு பாகிஸ்தான் தூதர் கூறினார்.