1,068.54 ஹெக்டேர் இரயில்வே நிலங்கள் ஆக்கிரமிப்பு.. சுமார் 42 நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானங்களுக்கு சமம்... எப்படி மீட்க போகிறார்கள்..
இந்திய ரயில்வேக்கு சொந்தமான நிலங்கள் நாடு முழுவதும் பெருமளவில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற தரவுகளின்படி, மார்ச் 2025 நிலவரப்படி சுமார் 1,068.54 ஹெக்டேர் இரயில்வே நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. இது சுமார் 42 நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானங்களுக்கு இணையான பரப்பளவாகும்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த ஆக்கிரமிப்பு 32 சதவீதம் அதிகரித்துள்ளது. 2020-21 நிதியாண்டில் 810.31 ஹெக்டேராக இருந்த ஆக்கிரமிப்பு, தற்போது 1,068 ஹெக்டேராக உயர்ந்துள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைகளில் இரயில்வே நிர்வாகம் ஈடுபட்டாலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் வெறும் 98 ஹெக்டேர் நிலம் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்படும் நிலங்கள் இரயில்வே உள்கட்டமைப்புத் திட்டங்கள் மற்றும் வணிக மேம்பாட்டிற்காகப் பயன்படுத்தப்படுகின்றன.
இந்தத் தரவுகளில் மிக முக்கியமான குறைபாடு என்னவென்றால், இரயில்வே நிர்வாகத்திடம் கடந்த 5 ஆண்டுகளுக்கான தரவுகள் மட்டுமே உள்ளன. 25 ஆண்டுகாலத் தரவுகளைக் கேட்டபோது, தன்னிடம் 5 ஆண்டுகாலப் பதிவுகள் மட்டுமே உள்ளதாக இரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.
மேலும், மாநிலம் வாரியான அல்லது இட வாரியான ஆக்கிரமிப்புத் தகவல்களைத் திரட்ட தனிப்பட்ட மண்டல இரயில்வே அலுவலகங்களை அணுகுமாறு அறிவுறுத்தியுள்ளது. ஆக்கிரமிப்புகளைத் தடுப்பதிலும், மீட்கப்பட்ட நிலங்களை முறையாகப் பராமரிப்பதிலும் உள்ள சவால்கள் இந்திய இரயில்வேக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளன.
