வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 12 மார்ச் 2016 (13:50 IST)

ஆதார் அட்டை மக்களை கண்காணிப்பதற்காகவா? - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

ஆதார் அட்டைக்கு சேகரிக்கப்படும் விபரங்களினால் எதிர்க்கட்சிகளும், மக்களும் கண்காணிக்கப்படுவார்கள் என்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
 

 
ஆதார் எண்ணை கட்டாயமாக்கும் மசோதா மக்களவையில் வெள்ளியன்று நிறைவேற்றப்பட்டது. மக்களவையில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஆதார் மசோதாவை தாக்கல் செய்தார்.
 
இதனையடுத்து, ஆதார் மசோதாவில் சில திருத்தங்களை மேற்கொள்ள காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன. ஆதார் மசோதாவை மக்களவையில் நிறைவேற்றுவதாகவும், மாநிலங்களவையில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்வதகாவும் அவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார்.
 
இந்நிலையில், மாநிலங்களவையில் நடந்தவிவாதத்தில் பேசிய பிஜு ஜனதாதள உறுப்பினர் தாத்தாகாட் சத்பதி, “ஆதார் கார்டுக்கு சேகரிக்கப்படும் விபரங்களை வைத்து பெருமளவில் கண்காணிக்க முடியும்.
 
இந்தியாவிலுள்ள இனங்களின் நிலையை அறிந்து அவற்றில் ஆட்சியாளர்களின் விருப்பத்திற்கேற்ப சில இனங்களை கண்டறிந்து தனிமைப்படுத்தி ஒழிக்கும் நடவடிக்கை இனத் தூய்மைப்படுத்துவது என்றழைக்கப்படுகிறது.
 
இவ்வாறான இனத் தூய்மைக்கான நடவடிக்கை எடுக்கவும் இந்த விபரங்கள் பயன்படுத்தப்படும் அபாயம் இருக்கிறது என்ற அச்சமும் எழுந்துள்ளது.
 
ஒரு குடிமகன் குறித்த பயோலாஜிக்கல் தகவல்களை சேகரிப்பது அபாயகரமானது. இந்த விசயத்தில் முந்தைய காங்கிரஸ் அரசாக இருந்தாலும் இப்போதைய பாஜக அரசாக இருந்தாலும் அவர்களின் மனங்கள் ஒன்றாகவே இருக்கின்றன.
 
வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட எண்ணற்ற அடையாள அட்டைகள் இருக்கும்போது இது போன்ற தேவையற்ற விசயங்களில் ஏன் மக்களின் வரிப்பணத்தை வீணாக்க வேண்டும்? ஆதார் கார்டு விசயத்தில் தேசிய பாதுகாப்பு என்பதை வரையறுக்க வேண்டும். இம்மசோதாவின் பிரிவுகள் அரசியல் கட்சிகளை ஒடுக்கவே பயன்படும்” என்று பேசினார்.
 
இதைத் தொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர் ராஜீவ் சத்தவ், காங்கிரஸ் அரசு ஆதார் கார்டு திட்டத்தை அறிமுகப்படுத்திய போது மோடியும் ராஜ்நாத் சிங் போன்ற பாஜக தலைவர்கள் எதிர்த்தனர்.
 
இப்போது அவர்களே இத்திட்டத்தை கொண்டு வருகின்றனர். இதில் தேசிய பாதுகாப்பு குறித்து போதுமான விளக்கம் இல்லை இது அரசின் விருப்பத்திற்கு விடப்பட்டுள்ளது என்றார்.