1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 20 மே 2015 (21:18 IST)

இரவோடு இரவாக நித்தியானந்தா ஆசிரமத்தை விட்டு தப்பி ஓட்டம்

பிரபல சாமியார் நித்யானந்தாவுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இரவோடு இரவாக வாரணாசி ஆசிரமத்தில் இருந்து அவர் தப்பி ஓடினார்.
 
உத்தரபிரதேசம் வாரணாசியில் ஆன்மிக நிகழ்ச்சிகளை 21 நாட்கள் நடத்துவதற்கு அவரும், அவரது ஆதரவாளர்களும் திட்டமிட்டிருந்தனர். இதையொட்டி சில தினங்களுக்கு முன்பு நித்யானந்தா வாரணாசிக்கு சென்றிருந்தார்.
 

 
ஆனால் ஆன்மிக நகரமான வாரணாசியில் செக்ஸ் புகாரில் சிக்கி சர்ச்சைக்குரிய நித்யானந்தாவுக்கு மிகவும் ஆடம்பரமாக பிளக்ஸ்கள், பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது பக்தர்கள் மனதை புண்படுத்தியது. பொதுமக்கள் மத்தியிலும், யாத்ரீகர்கள் மத்தியிலும் மிகுந்த முகச்சுளிப்பை ஏற்படுத்துவதாக காணப்பட்டது.
 
மேலும், மகளிர் அமைப்பினர், பனாரஸ் பல்கலை கழக மாணவர் சங்கத்தினரைச் சேர்ந்தவர்கள் ‘புனித வாரணாசியை விட்டு நித்யானந்தாவே வெளியேறு’ என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலைகளில் வைக்கப்பட்டிருந்த நித்தியானந்தாவின் பிளக்ஸ் பேனர்களை அடித்து நொறுக்கியும், அவரது படத்திற்கு செருப்பு மாலை அணிவித்தும் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.
 
அங்கு போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து நித்யானாந்தாவை நான்கு தினங்களுக்குள் வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளில் நிர்வாகம் ஈடுபடும் என மாவட்ட அரசு அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

இதற்கிடையில் தனது நிகழ்ச்சிகளை பாதியில் ரத்து செய்து விட்டு நேற்று இரவோடு இரவாக நித்யானந்தா வாரணாசியை விட்டு ஓட்டம் பிடித்ததாக அவர் தங்கியிருந்த ஆசிரம நிர்வாக தரப்பினர் தெரிவித்தனர்.