வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : சனி, 27 ஜூன் 2015 (06:22 IST)

பிரதமர் நரேந்திர மோடி விழாவை புறக்கணித்த புதுவை முதலமைச்சர் ரங்கசாமி?

டெல்லியில், மத்திய அரசு மிக முக்கியமான மூன்று திட்டங்களை  நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்ட இந்த விழாவை புதுவை முதலமைச்சர் ரங்கசாமி புறக்கணித்துள்ளதாக புகார் கிளம்பியுள்ளது.
 

 
இது குறித்து புதுவை தெற்கு மாநில திமுக பொறுப்பாளர் இரா.சிவா வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
மத்திய அரசு மிக முக்கியமான மூன்று திட்டங்களை  நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளது. இதற்கான விழா டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி  தலைமையில் நடைபெற்றது.
 
இந்த விழாவில் பங்கேற்க புதுவை முதலமைச்சர் ரங்கசாமிக்கும் அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு போன் மூலம் விழாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
 
இது மட்டுமின்றி மத்திய உள்துறை  அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள புதுவை மாநிலத்திற்கு மத்திய அரசின்  ஆதரவும், சுமூகமான அணுகுமுறையும்  தற்போதைய காலகட்டத்தில் மிகவும் இன்றியமையாதவை.
 
இது போன்ற விழாக்களில் பங்கேற்றால்தான் மத்தியில் ஆளும் ஆட்சியாளர்களின் நம்பிக்கையை பெறமுடியும். இந்த நல்ல வாய்ப்பை புதுவை முதலமைச்சர் ரங்கசாமி தவறவிட்டுள்ளார்.
 
பிரதமர் நரேந்திர மோடி விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி பங்கேற்றிருந்தால் புதுவை மாநிலத்தின் கடன் தள்ளுபடி, மாநில அந்தஸ்து, கூடுதல் நிதி ஆகியவற்றை கேட்டுப் பெற்றிருக்க முடியும்.
 
மேலும், ஸ்மார்ட் சிட்டி போன்ற திட்டத்தில் புதுவை இடம்பெற்றுள்ளதா இல்லையா என்ற சர்ச்சைக்கு இடமின்றி போயிருக்கும். இது போன்றவைகளை ரங்கசாமி தவறவிட்டுள்ளார்.
 
இதன்மூலம் புதுவை மாநிலத்தின் மீதும், மக்களின் மீதும் ரங்கசாமி எத்தகைய அதீத அக்கறை கொண்டுள்ளார் என்பது வெளிப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.