1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Updated : வெள்ளி, 25 நவம்பர் 2016 (13:40 IST)

அவசரமாக அச்சடிப்பு ; புதிய 500 ரூபாய் நோட்டில் குளறுபடிகள் - மக்கள் மத்தியில் குழப்பம்

மக்களிடம் உள்ள பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது எனவும், மக்கள் தங்களிடம் உள்ள ரூபாய் நோட்டுகளை, வங்கிக்கு சென்று மாற்றிக் கொள்ள வேண்டும் எனவும் பிரதமர் மோடி சமீபத்தில் அறிவித்தார். 


 

 
அதேபோல் புதிய 2000 ரூபாய் நோட்டுகளை ஏ.டி.எம் மற்றும் வங்கிகளில் மக்கள் பெற்று வருகிறார்கள். ஆனால், அந்த நோட்டிற்கு சில்லரை கிடைக்காததால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். 
 
இந்நிலையில் புதிய 500 ரூபாய் நோட்டு, ஏ.டி.எம் மையங்களில் வைக்கப்பட்டு, மக்களிடம் புழக்கத்திற்கு வந்துள்ளது. ஆனால், அந்த நோட்டை பயன்படுத்துவதில் பொதுமக்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. 
 
ஏனெனில், புதிய 500 ரூபாய் நோட்டுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கிறது. எழுத்துகள், பாதுகாப்பு அம்ச கோடுகள் ஒரே சீராக இல்லாமல் வெவ்வேறு மாதிரி காணப்படுகிறது. இதனால், தங்கள் கையில் இருப்பது உண்மையான நோட்டா அல்லது கள்ளப்பணமா என மக்களிடம் குழப்பம் ஏற்பட்டு வருகிறது. 
 
இதுபற்றி கருத்து தெரிவித்த ரிசர்வ் வங்கி செய்தித் தொடர்பாளர் அல்பனா கில்லாவாலா “மக்களின் பிரச்சனைகளை சமாளிக்க, புதிய 500 ரூபாய் நோட்டுகளை அவசரம் அவசரமாக அச்சடித்ததில் சில தவறுகள் நிகழ்ந்துவிட்டது. இதற்காக பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. அவர்கள் அதை பயன்படுத்தலாம். அல்லது ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைத்து விடலாம்” என கூறியுள்ளார்.