வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Bharathi
Last Modified: புதன், 21 அக்டோபர் 2015 (07:11 IST)

நேதாஜி குறித்த ஆவணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்: ரஷ்யாவுக்கு சுஷ்மா வேண்டுகோள்

நேதாஜி குறித்த ஆவணங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று ரஷ்யாவுக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் வலியுறுத்தி உள்ளார்.


 
நேதாஜி சுபாஷ் சந்திரபோஷ் குறித்த ரகசிய ஆவணங்களை வெளியிட்டால் அயல் உறவுக் கொள்கைகள் பாதிக்கப்படும் என்று கூறி அந்த ஆவணங்களை வெளியிடாமால் மத்திய அரசு தொடர்ந்து கள்ள மெளனம் சாதித்து வருகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு நேதாஜி குறித்த ஆவணங்களை மேற்கு வங்க அரசு வெளியிட்டது.மத்திய அரசும் நேதாஜி தொடர்பான ஆவணங்களை வெளியிட வேண்டும் என்று அம்மாநில முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியிருந்தார்.

இதனிடையே பிரதமர் இல்லத்தில் நேதாஜியின் குடும்பத்தினரை சந்தித்த பிரதமர் மோடி சுபாஷ் சந்திரபோஷின் பிறந்தநாளின் போது ஆவணங்கள் வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தார்.

இந்தச் சூழலில் 3 நாட்கள் அரசு முறைப் பயணமாக ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவிற்கு சென்றுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் , நேதாஜி தொடர்பான ஆவணங்களை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அப்போது, வர்த்தகம், பாதுகாப்பு, அணுசக்தி ஒத்துழைப்பு, ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் மறுசீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.