1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வெள்ளி, 24 ஏப்ரல் 2015 (12:41 IST)

செம்மர கடத்தல்: நடிகை நீத்து அகர்வால் வங்கி கணக்கு முடக்கம் - போலீஸ் வலைவீச்சு!

செம்மர கடத்தலில் தொடர்புடைய நடிகை நீத்து அகர்வாலின் வங்கி கணக்குகளை முடக்கி, ஆந்திர போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
 

 
திருப்பதி அருகே சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்த முயன்றதாக சமீபத்தில் தமிழக கூலித் தொழிலாளர்கள் 20 பேரை ஆந்திர போலீசார் சுட்டுக் கொன்றனர். இது தமிழகத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து செம்மர கடத்தலை தடுக்க ஆந்திர போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். கைது செய்யப்பட்டுள்ள செம்மரங்களை வெட்டும் கூலித்தொழிலாளர்கள் அளித்த தகவல்களின்படி, செம்மர கடத்தலில் தொடர்புடைய முக்கிய நபர்களை கைது செய்யும் நடவடிக்கையில் அம்மாநில போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
 
செம்மர கடத்தலில் ஈடுபட்டதாக ஆந்திராவைச் சேர்ந்த மஸ்தான் வலி அவரது சகோதரர் பாபா வலி ஆகியோரை கடந்த சில நாட்களுக்கு முன் போலீசார் கைது செய்தனர். மஸ்தான் வலியிடம் போலீசார் நடத்திய விசாரணையில், செம்மர கடத்தல் கும்பலுடன் நடிகை நீத்து அகர்வாலுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, செம்மர கடத்தல் தொடர்பாக இவர்கள் 3 பேர் மீதும் கர்னூல் மாவட்டம் ருத்ராவரம் போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
 
மஸ்தான் வலி சாதாரண எலுமிச்சை வியாபாரியாக இருந்தவர். திருப்பதிக்கு வந்தபோது, அவருக்கு செம்மர கடத்தல் புள்ளிகளுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மஸ்தான் வலியிடம் பணப்புழக்கம் அதிகரித்து, சினிமா தயாரிப்பில் ஈடுபட்டிருக்கிறார். கடந்த 2013 ஆம் ஆண்டில் அவர் தயாரித்த ‘பிரேம பிரயாணம்’ என்ற தெலுங்கு படத்தில் நீத்து அகர்வால் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
 
அதன்பிறகு, மஸ்தான் வலிக்கும் நீத்து அகர்வாலுக்கும் பழக்கம் அதிகரித்து அவர்கள் இருவரும் சேர்ந்து வாழ்க்கை நடத்தியுள்ளனர். மேலும் நீத்து அகர்வாலுக்கு, மஸ்தான் வலி ரூ.35 லட்சம் மதிப்பில் ஒரு வீட்டையும் வாங்கி கொடுத்து இருக்கிறார். சினிமா தயாரிப்பில் பெரிய அளவில் வெற்றிபெற முடியாததால் மஸ்தான் வலி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்து கொண்டு அரசியலில் குதித்துள்ளார் என்று போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
 
மேலும், செம்மர கடத்தலில் கிடைத்த பணத்தை மஸ்தான் வலி, நீத்து அகர்வாலின் வங்கி கணக்கில் போட்டு வைத்துள்ளார் என்றும், நீத்து அகர்வாலின் வங்கி கணக்கில் இருந்து பல கடத்தல்காரர்களுக்கு பணம் அனுப்பப்பட்டு இருப்பதாகவும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. குறிப்பாக, கடத்தல்காரன் சங்கர் நாயக்கிற்கு தனது வங்கி கணக்கில் இருந்து பெரும் தொகையை நீத்து அகர்வால் அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
 
இந்நிலையில், மஸ்தான் வலி கைது செய்யப்பட்டதை அறிந்ததும், நீத்து அகர்வால் தலைமறைவாகி விட்டார். அவர் ஹைதராபாத், பெங்களூர் அல்லது மும்பையில் பதுங்கி இருக்கலாம் என்று கருதி ஆந்திர மாநில போலீசார் அவரை கைது செய்ய தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர். மேலும், நீத்து அகர்வாலின் வங்கி கணக்குகளையும் ஆந்திர போலீசார் முடக்கியுள்ளனர்.