நீட் முறைகேடு அதிர்ச்சி: வினாத்தாள் தயாரிப்புக் குழுவில் இருந்த புனே பெண் பேராசிரியை சிபிஐ-யால் கைது
இளநிலை மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான நீட் தேர்வில் ஏற்பட்டுள்ள வினாத்தாள் கசிவு முறைகேடு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே 3ஆம் தேதி நடைபெற்ற இந்தத் தேர்வில் சுமார் 25 லட்சம் மாணவர்கள் பங்கேற்ற நிலையில், தேர்வுக்கு முன்பே அசல் வினாத்தாள் கசிந்தது சிபிஐ விசாரணையில் அம்பலமானது. மகாராஷ்டிராவில் கசிந்த இந்த வினாத்தாள், ராஜஸ்தான் பயிற்சி மையங்கள் வழியாக கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களுக்குப் பல லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது.
இந்த வினாத்தாள் விற்பனை வலையமைப்பின் பின்னணியில் இருக்கும் முக்கியப் புள்ளிகளைச் சிபிஐ அதிகாரிகள் தீவிரமாகத் தேடி வந்தனர். அந்த வகையில், டெல்லியில் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு, மகாராஷ்டிர மாநிலம் புனேயைச் சேர்ந்த தாவரவியல் பேராசிரியை மனிஷா குருநாத் மந்தாரே என்பவரைச் சிபிஐ அதிகாரிகள் தற்போது கைது செய்துள்ளனர். இவர் நீட் தேர்வின் உயிரியல் வினாத்தாளைக் கசியவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதற்கு முந்தைய நாள், புனேயைச் சேர்ந்த வேதியியல் விரிவுரையாளர் பி.வி. குல்கர்னி என்பவரும் கைது செய்யப்பட்டார். அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், கைது செய்யப்பட்டுள்ள இந்த இருவரும் தேசிய தேர்வு முகமையின் நீட் வினாத்தாள் தயாரிக்கும் நிபுணர் குழுவில் இடம் பெற்றிருந்தவர்கள் ஆவர். இந்த முறைகேட்டைத் தொடர்ந்து மே 3ஆம் தேதி நடந்த நீட் தேர்வை ரத்து செய்துள்ள NTA, வரும் ஜூன் 21 அன்று மறுதேர்வு நடத்தப்படும் என அறிவித்துள்ளது. இதற்கு மாணவர்கள் மீண்டும் புதிதாகப் பதிவு செய்யத் தேவையில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
Edited by Siva
