செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 2 அக்டோபர் 2025 (14:54 IST)

நீட் பயிற்சியில் இருந்த 20 வயது மாணவர் மர்ம மரணம்.. கொலையா? தற்கொலையா?

நீட் பயிற்சியில் இருந்த 20 வயது மாணவர் மர்ம மரணம்.. கொலையா? தற்கொலையா?
ராஜஸ்தானின் கோட்டா நகரில் நீட் நுழைவு தேர்வுக்குத்தயாராகி வந்த 20 வயது மாணவர்  தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
பீகார் மாநிலம், பாட்னாவை சேர்ந்த மாணவர் லக்கி சௌத்ரி, கடந்த இரண்டு ஆண்டுகளாக கோட்டாவில் தங்கி, நீட் தேர்விற்கு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் திடீரென நேற்று அவர் சீலிங் ஃபேனில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
 
தற்கொலை செய்து கொண்ட மாணவனின் அறை உள்ளிருந்து பூட்டப்பட்டிருந்தது என்றும், இதில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் எந்த அறிகுறியும் தற்போதைக்கு கண்டறியப்படவில்லை," என்றும் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
 
ஆனால், லக்கியின் தாய்மாமா கோஷல் குமார் சௌத்ரி, "லக்கி தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு கோழை அல்ல," என்றும்,  இது திட்டமிட்ட சதி எனவும் லக்கி கொலைக்கு  காரணம் ராகுல் என்ற வாலிபர்தான் என்று சந்தேகிப்பதாகவும், அவர் தற்போது தலைமறைவாக இருப்பதாகவும் கூறினார்.
 
மேலும் லக்கியின் அறையில் இருந்து தற்கொலை குறிப்பு எதுவும் கிடைக்கவில்லை என்றும், மேலும் அவரது மொபைல் போன் மற்றும் வாலட் ஆகியவையும் காணாமல் போயுள்ளன என்றும் அவர் கூறினார்.
 
இந்த நிலையில் பிரேத பரிசோதனைக்கு பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்த மரணம் குறித்து   வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
இதற்கிடையில், அதே பி.ஜி. அறையில் பக்கத்து அறையில் தங்கியிருந்த பீகாரை சேர்ந்த மற்றொரு மாணவரும் காணாமல் போனதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
Edited by Mahendran