வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வெள்ளி, 26 செப்டம்பர் 2014 (11:19 IST)

மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தல்: காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணியும் முறிந்தது

மகாராஷ்டிர மாநிலத்தில் அடுத்த மாதம் 15 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் நாளை மறுநாளுடன் முடிவடைய உள்ள நிலையில், தொகுதி உடன்பாடு எட்டப்படாததால் 25 ஆண்டு கால கூட்டணியான சிவசேனா-பாஜக கூட்டணி உடைந்தது.
 
இதேபோல் ஆளும் கூட்டணியான காங்கிரஸ்-தேசியவாத காங்கிரசிலும் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வந்தது. இன்று மாலை வரை தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படாத நிலையில், 15 ஆண்டு கால கூட்டணியை முறித்துக்கொண்டு தனித்து போட்டியிட தேசியவாத காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
 
இதுபற்றி தேசியவாத கட்சியின் சட்டமன்ற கட்சி தலைவரும், துணை முதலமைச்சருமான அஜித் பவார் கூறுகையில், “காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை தேசியவாத காங்கிரஸ் வாபஸ் பெறுகிறது. இந்த கூட்டணி முறிவுக்கு முதல்வர் பிருத்விராஜ் சவான் தான் காரணம். தேசியவாத காங்கிரஸ் முந்தைய காங்கிரஸ் முதல்வர்களால் ஒருபோதும் புறக்கணிக்கப்பட்டதில்லை” என்றார்.
 
கூட்டணி கட்சிகளை ஆலோசிக்காமல் காங்கிரஸ் கட்சி தன்னிச்சையாக தொகுதிகளை அறிவித்ததாகவும், தங்களின் நம்பிக்கைக்கு துரோகம் செய்துவிட்டதாகவும் தேசியவாத காங்கிரஸ் மாநில தலைவர் சுனில் தட்காரே குற்றம்சாற்றினார்.
 
அஜித் பவார் மற்றும் அவரது கட்சியின் பிற அமைச்சர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய உள்ளனர். மேலும், அஜித் பவார் நாளை கவர்னரை சந்தித்து, அரசுக்கு அளிக்கும் ஆதரவை வாபஸ் பெறுவது தொடர்பான கடிதத்தை கொடுக்க உள்ளார்.
 
தேசிய கட்சிகளுடனான கூட்டணியை மாநிலக் கட்சிகள் முறித்துக்கொண்டதால், சட்டமன்றத் தேர்தலில் 4 முனைப்போட்டி உறுதியாகிவிட்டது.