வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : புதன், 21 மே 2014 (16:48 IST)

மோடி அலை பாதிக்காத மாநிலம் ஒடிசா - ஏன்?

மத்தியில் பாஜக ஆட்சியைப் பிடித்ததற்கு காங்கிரஸ் மீதான அதிருப்தி தான் காரணம் என்றும், நாடெங்கும் மோடி அலை வீசியது என்றும் காரணங்கள் சொல்லப்பட்டுகின்ற சூழலில் அதிருப்தியோ, அலையோ பாதிக்காத மாநிலங்களில் ஒன்று ஒடிசா.
Naveen Patnaik
ஒடிசாவில் பிஜூ ஜனதா தளம் பெரும்பான்மை இடங்களைப் பிடித்து மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ளது. இதன் மூலம் நவீன் பட்நாயக் 4-வது முறையாக முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார்.
 
நாடாளுமன்ற தேர்தலுடன் ஒடிசா சட்டமன்றக்கும் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 147 சட்டமன்ற தொகுதிகளில் 115 இடங்களை பிஜூ ஜனதா தளம் கைப்பற்றியதன் மூலம் நவீன் பட்நாயக் மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தார்.
 
அவர் இன்று 4-வது முறையாக முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். நவீன் பட்நாயக்குக்கு கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் அமைச்சர்களும் பதவி ஏற்றனர்.
 
நவீன் பட்நாயக் முதன்முறையாக 1999 ஆம் ஆண்டு மத்தியில் வாஜ்பாய் தலைமையில் ஆட்சியமைத்தபோது எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு தனது அரசியல் வாழ்க்கையை துவங்கினார். வாஜ்பாய் அமைச்சரவையில் அவர் மத்திய அமைச்சராக இருந்தார்.
 
2000 ஆம் ஆண்டு ஒடிசாவில் பாஜகவுடன் கூட்டணியமைத்து பிஜூ ஜனதா தளம் ஆட்சியைப் பிடித்தபோது நவீன் பட்நாயக் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஒடிசா முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
 
பாஜகவுடனான இந்த உறவு தொடரவில்லை. 2004க்கு பிறகு நவீன் பட்நாயக்கின் இந்த தொடர் வெற்றிக்குக் காரணம் வாஜ்பாயும், பாஜகவும் தான் என்றும், தேசிய ஜனநாயக கூட்டணியில்லையென்றால் ஒடிசாவில் நவீன் பட்நாயக் வெற்றி பெற முடியாது என்று பாஜகவினர் வெளிப்படையாகவே பேசத் துவங்கினர். 2004 நாடாளுமன்ற தேர்தலின்போதே தொகுதிகளை பிரித்துக் கொள்வதில் பெரும் இழுபறி ஏற்பட்டது.
 
எல்லாவற்றுக்கும் மேலாக 2007-2008 காலகட்டங்களில் ஒடிசாவின் கந்தமால் மாவட்டத்தில் ஒரு கிருஸ்த்தவ பாதிரியார் மற்றும் அவருடைய குழந்தைகள் உட்பட மொத்த குடும்பத்தினரையும் இந்துத்துவவாதிகள் உயிருடன் எரித்துக் கொன்றனர். இதன் தொடர்ச்சியாக சுவாமி லக்ஷ்மனானந்த சரஸ்வதி நக்சல்களால் கொல்லப்பட்டார்.

கிருஸ்த்துவ பாதிரியார் குடும்பம் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்குப்பழியாக சுவாமி லக்ஷ்மனானந்தா கொல்ப்பட்டதாக தகவல் வெளியானது. இதன் தொடர்ச்சியாக ஆயிரக்கணக்கான கிருஸ்த்தவர்களையும், பழங்குடியின மக்களையும் பஜ்ரங்தள் உள்ளிட்ட இந்துத்துவ அமைப்பினர் கொலை செய்தனர். அவர்களுடைய குடியிருப்புகளை தீ வைத்து கொளுத்தினர்.
 
இந்த சம்பவம் முதலமைச்சராக இருந்த நவீன் பட்நாயக்கை கடும் கோபத்திற்கு ஆளாக்கியது. 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலின் போது, பாஜக மற்றும் இந்துத்துவா அமைப்பினர் கந்தமால் மாவட்டத்தில் கிருஸ்த்தவர்களுக்கு எதிராக நடத்திய கொலைவெறியாட்டத்தை சுட்டிக்காட்டி பாஜகவை கழட்டி விட்டுவிட்டு தனியாக தேர்தலை எதிர் கொண்டார்.
 
2009 ஆம் ஆண்டு தனியாக நின்று மொத்தம் உள்ள 21 நாடாளுமன்ற தொகுதிகளில் 14-லும், 147 சட்டமன்ற தொகுதிகளில் 103-லும் வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சியமைத்தார்.
 
சமீபத்தில் நடந்து முடிந்த 2014 பொது தேர்தல் மற்றும் மாநில தேர்தலில் கடந்த முறையை விட கூடுதலான இடங்களைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். மொத்தம் 21 நாடாளுமன்ற தொகுதிகளில் 20 இடங்களையும், 147 சட்டமன்ற தொகுதிகளில் 117 இடங்களையும் பிடித்து தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளார்.
 
இவருடைய தொடர் வெற்றிகளுக்கு காரணம், இவருடைய எளிமை. அமைதியான பேச்சு. ஊழலற்ற மாநிலமாக்குவதற்கான தொடர் முயற்சிகள் மற்றும் வெளிப்படையான ஆட்சி முறை ஆகியனவாகும்.
 
திருமணமே செய்து கொள்ளாத நவீன் பட்நாயக், யாரும் எளிதில் அணுகக் கூடிய சாதாரண மனிதர். ஊழலற்ற நிர்வாகம் என்பதில் உறுதியான நிலைப்பாடு. இவர் தனது அரசியல் வாழ்க்கையை துவக்கிய உடனேயே கட்சிக்குள் இருந்த ஊழல்வாதிகளை கட்சியை விட்டு விரட்டினார். முடிந்தவரை நேர்மையான நபர்களையே அரசின் முக்கிய பெறுப்புகளுக்கு கொண்டுவந்தார்.
 
பாஜக மீதான அதிருப்தி தொடங்கியதற்கான காரணமும் ஊழல்தான். பாஜகவின் மீதான ஊழல் குற்றச்சாற்றுகளின் காரணமாக மனதளவில் கொஞ்சம் கொஞ்சமாக விலகியே வந்தார். காங்கிரஸுடன் இன்றுவரை கூட்டணி வைக்காததற்கு காரணமும் ஊழல்தான்.
 
மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது ஒடிசாவில் ஊழல் குற்றச்சாற்றுகள் குறைவே. அரசு அதிகாரிகள் மக்களுக்கு எஜமானர்களைப் போல் நடந்து கொள்ளாமல் நண்பர்களைப் போல நடந்து கொள்கிறார்கள். தங்களுடைய பணிகளை செய்வதற்கு லஞ்சம் கேட்பதில்லை.
 
ஒடிய மொழியே சரியாக தெரியாத நவீன் பட்நாயக்கைதான் ஒடிசா மக்கள் நேசிக்கிறார்கள். மண்ணையும், மொழியையும் நேசிப்பதைக் காட்டிலும் மக்களை நேசித்தாலே எவர் மீதான அதிருப்தியும் நம்மை பாதிக்காது. எப்பேர்பட்ட அலையும் அசைக்காது.
 
4-வது முறையாக இன்று முதல்வர் பதவியேற்றுக் கொண்டுள்ள நவீன் பட்நாயக் ஒடிசா மக்களின் நாயகன்! (Editor)
 
Information courtesy:- Mr.Badri Narayan Nanda from Bhubaneswar