1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 28 ஏப்ரல் 2015 (21:05 IST)

பொதுவெளியில் குப்பைகளை எரித்தால் ரூ.5000 அபராதம் - தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி

பொதுவெளியில் குப்பைகளை எரித்தால் ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் என்ற அதிரடி தீர்ப்பை தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கியுள்ளது.
 
பெருகி வரும் வாகனங்களால் காற்றின் தரம் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகிறது. அதுவும் டெல்லி போன்ற பெருநகரங்களில் காற்று மாசுபடுவதற்கு முக்கிய காரணமாக வாகனங்கள் இருக்கின்றன. இதனை தடுக்க சில வெளிநாடுகளில் கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டு வருகின்றன.
 

 
கடந்த 3 வாரங்களுக்கு முன்பு, மாசுபாட்டை குறைக்கும் நோக்கில் 10 ஆண்டுகளுக்கு மேல் உபயோகத்தில் இருக்கும் டீசல் வாகனங்களுக்கு தடை விதித்து பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.
 
தற்போது, பொதுவெளியில் குப்பைகள், இலைகள், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் ரப்பர் ஆகியவற்றை எரித்தால் ரூ. 5000 அபராதம் விதிக்கப்படும் என்று பசுமை தீர்ப்பாயம் அறிவித்துள்ளது. இது டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உடனடியாக இதனை அமல்படுத்த அறிவுறுத்தியுள்ளது.
 
இது குறித்து அந்த அறிக்கையில், “குப்பைகளை எரித்த பிறகு காற்று மாசுபாட்டின் அளவு 29.4 சதவீதமாக இருக்கிறது. மேலும் எரியும் பொருட்களால் சுவாசப் பிரச்சனைகள் ஏற்படுவதோடு புற்றுநோயையும் உண்டாக்குகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.