யூடியூப் கிரியேட்டர்களும் இனி வருமான வரி கட்ட வேண்டும்: மத்திய அரசின் புதிய மசோதா..!
மக்களவையில் முன்மொழியப்பட்டுள்ள 'தேசிய படைப்பாளர் பொருளாதார மசோதா 2026' (National Creator Economy Bill 2026), சமூக வலைதளங்களில் வருமானம் ஈட்டும் கிரியேட்டர்களை ஒரு அதிகாரபூர்வ தொழில்முறை நிபுணர்களாக மாற்றவுள்ளது.
இந்தியாவில் சுமார் 2.5 மில்லியனுக்கும் மேற்பட்ட கிரியேட்டர்கள் உள்ள நிலையில், அவர்களை முறைப்படுத்தவும் சட்ட ரீதியான பாதுகாப்பை வழங்கவும் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
இந்த மசோதாவின் கீழ், கிரியேட்டர்கள் அனைவரும் ஒரு மையப்படுத்தப்பட்ட போர்ட்டலில் பதிவு செய்ய வேண்டும். அவர்களுக்கு ஆதார் மற்றும் பான் அட்டையுடன் இணைக்கப்பட்ட ஒரு தனித்துவமான 'கிரியேட்டர் ஐடி' வழங்கப்படும். இதன் மூலம் விளம்பரங்கள் மற்றும் பிராண்ட் கொலாபரேஷன் மூலம் அவர்கள் ஈட்டும் வருமானம் கண்காணிக்கப்பட்டு, வருமான வரி செலுத்துவதில் வெளிப்படைத்தன்மை உருவாக்கப்படும்.
மேலும், பிராண்டுகளுடன் ஏற்படும் ஒப்பந்த சிக்கல்களுக்கு இந்த மசோதா தீர்வை வழங்கும். விளம்பரம் செய்த பிறகு பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டால், கிரியேட்டர்கள் சட்ட ரீதியான பாதுகாப்பை பெற முடியும். பயனாளர்களை பொறுத்தவரை, ஒரு வீடியோ விளம்பரமா அல்லது உண்மையான பரிந்துரையா என்பதை முதல் 5 நொடிகளுக்குள் கிரியேட்டர்கள் அறிவிக்க வேண்டியது கட்டாயமாக்கப்படும்.
இதனால் போலி தகவல்கள் மற்றும் மறைமுக விளம்பரங்களால் மக்கள் ஏமாறுவது தவிர்க்கப்படும். சிறு கிரியேட்டர்களுக்கு இது ஒரு சவாலாக இருந்தாலும், நீண்ட கால அடிப்படையில் கன்டென்ட் கிரியேஷன் துறையை ஒரு நம்பகமான தொழிலாக இது மாற்றும்.
Edited by Siva
