1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Lenin AK
Last Updated : வியாழன், 2 அக்டோபர் 2014 (18:03 IST)

”தூய்மை இந்தியா” திட்டம் – கமல் உள்பட 9 பேருக்கு மோடி அழைப்பு

பிரதமர் நரேந்திர மோடி தொடங்கியுள்ள, ‘தூய்மை இந்தியா’ திட்டத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், திட்டத்தை மேலும் விரிவுபடுத்தும் நோக்கிலும் கமல், சல்மான், சச்சின் உள்ளிட்ட 9 பிரபலங்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

 
டெல்லி வால்மீகி பஸ்தியில் பிரதமர் மோடி இந்தத் ‘தூய்மை இந்தியா‘ திட்டத்தைத் தொடங்கி வைத்தார். காந்தி தங்கியிருந்த இல்லத்திற்கு வெளியே சாலையை அவர் சுத்தப்படுத்தினார். குப்பையாய் இருந்த பகுதி, சிறிது நேரத்தில் சுத்தமானது.
 
இது குறித்து நரேந்திர மோடி பேசுகையில், “தூய்மையான இந்தியா என்ற காந்திஜியின் கனவு இதுவரை நிறைவேறவில்லை. தற்போதைய தூய்மை இந்தியா திட்டத்தை காந்திஜி பார்த்துக்கொண்டிருக்கிறார்.

  
குப்பைகளைப் பார்க்கும்போது அதைப் படம் பிடித்துப் பதிவேற்றம் செய்யுங்கள். அதைப் போல் தூய்மைப்படுத்திய பிறகு அந்த இடத்தைப் படம் பிடித்துப் பதிவேற்றம் செய்யுங்கள்.
 
ஒவ்வொருவரும் வாரத்திற்கு இரண்டு முறை இந்தியாவைத் தூய்மைப்படுத்த முயற்சி செய்யுங்கள். ஒவ்வொரு அரசும் இந்த இயக்கத்தைச் செயல்படுத்த வேண்டும். செவ்வாயைத் தொட்ட நாம் ஏன் இந்தியாவையும் தூய்மைப்படுத்த முடியாது?“ இவ்வாறு அவர் பேசினார்.
 
நரேந்திர மோடி துடைப்பத்தை எடுத்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். மற்ற அமைச்சர்களும் அதிகாரிகளும் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
 
சாலையை மோடி சுத்தப்படுத்தும் காட்சி வீடியோவில் பதிவு செய்யப்பட்டு, சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இதே போன்று, மற்றைய பிரபலங்களும் தாங்களும் தெருக்களைச் சுத்தம் செய்வது போன்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை #mycleanindia என்ற ஹாஷ் டேக்-க்கு பதிவேற்றும் செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளார். 
 
இதற்காக அவர் கமல்ஹாசன், சல்மான் கான், சச்சின் டெண்டுல்கர், பிரியங்கா சோப்ரா, சசிதரூர், பாபா ராம்தேவ், அனில் அம்பானி, கோவா ஆளுநர், மிருதுளா சின்ஹா, பிரபலமான தரக் மேத்தா கா ஊல்டா சஸ்மா என்ற இந்தி தொலைக்காட்சித் தொடரின் படக் குழுவினர் ஆகிய பிரபலங்களுக்கு நேரடியாக அழைப்பு விடுத்துள்ளார்.
 
பிரியங்கா சோப்ராவும் சச்சின் டெண்டுல்கரும் உடனே இதை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்துள்ளனர்.
 
”தூய்மை இந்தியா” திட்டம் குறித்த மோடியின் பேச்சை இங்கே பாருங்கள்