வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : புதன், 11 ஜூன் 2014 (18:41 IST)

நாடாளுமன்ற மக்களவையில் நரேந்திர மோடியின் முதல் உரை

நாடாளுமன்ற மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நிறைவடைந்ததையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை இறுதியுரை ஆற்றினார்.
குடியரசுத் தலைவர் உரையில் அறிவித்த அனைத்து திட்டங்களையும் செயல்படுத்துவோம். மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற பாடுபடுவோம். இதில் எதிர்க்கட்சிகளுக்கு முக்கிய பொறுப்பு உள்ளது. திட்டங்களை நிறைவேற்ற அனைவரும் இணைந்து முயற்சிப்போம்.
 
ஏழைகளுக்காகத் தான் அரசு இருக்க வேண்டுமே தவிர, படித்தவர்களுக்கும் பணக்காரர்களுக்கும் அல்ல. மக்களின் நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில் செயல்படுவோம். நிலையான அரசு, நல்ல நிர்வாகம், வளர்ச்சி என்பதே எங்கள் அரசின் நோக்கம். ஏழைகளின் குரலுக்கு செவிசாய்க்கும் அரசாக மத்திய அரசு செயல்படும். குஜராத்தில் 24 மணி நேர மின்சாரம் வழங்குவது பற்றி வாக்குறுதி தந்தபோது பலர் சந்தேகப்பட்டனர். தற்போது அனைத்து கிராமங்களிலும் 24 மணி நேரம் மின்சாரம் உள்ளது.
 
கிராமங்களில் விவசாயத்திலும் மாற்றங்களை ஏற்படுத்த உறுதி பூண்டுள்ளோம். அனைவருக்கும் கல்வியும், தொலைத் தொடர்பு வசதியும் கிடைத்தால் புதிய பாரதம் உருவாகும். மற்ற நாடுகளுக்கு முன்மாதிரியாக உள்ள இந்தியா புதிய உச்சத்தை அடைய வேண்டும். கிராமங்கள் வளர்ச்சியடைந்தால் இளைஞர்கள் கிராமங்களைவிட்டு வெளியேற மாட்டார்கள். கிராமங்கள் வளர்ச்சியடைந்தால்தான் நாடு முன்னேறும். நாட்டில் எந்த ஏழையும் பசியால் வாடக்கூடாது.
 
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பெண்களுக்கு அதிக அதிகாரங்கள் அளிக்கப்பட வேண்டும். பாலியல் வன்கொடுமைகள் தொடர்பாக விமர்சனம் செய்வதை தவிர்த்து அவற்றை கட்டுப்படுத்த முன்வர வேண்டும்.
 
பிரதமராக பதவியேற்ற பிறகு நாடாளுமன்ற மக்களவையில் முதன்முறையாக இன்று மோடி பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.