வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : வியாழன், 20 நவம்பர் 2014 (09:19 IST)

நாடு திரும்பினார் நரேந்திர மோடி

மியான்மர், ஆஸ்திரேலியா, ஃபிஜி ஆகிய மூன்று நாடுகளுக்கு 10 நாள் சுற்றுப்பயணம் சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி நாடு திரும்பினார்.
 
மியான்மர், ஆஸ்திரேலியா, ஃபிஜி ஆகிய நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி 10 நாள் பயணம் மேற்கொண்டார். தனது சுற்றுப்பயணத்தின் இறுதியாக, அவர் பசிஃபிக் தீவு நாடான ஃபிஜிக்கு சென்றார்.
 
அதன்பின், ஃபிஜி பிரதமர் அலுவலகத்துக்கு மோடி சென்றார். அங்கு அந்நாட்டுப் பிரதமர் ஃபிராங்க் பைனிமராமாவுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, இரு தலைவர்களும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
 
அப்போது நரேந்திர மோடி கூறியதாவது:-
 
ஃபிஜியுடனான நமது உறவில் இது புதிய தொடக்கமாகும். நமது பழைமையான உறவைப் புதுப்பித்துக் கொள்ளும் வாய்ப்பாக எனது இந்தப் பயணத்தைப் பார்க்கிறேன்.
 
இங்கு மின்சார உற்பத்தி நிலையத்தை அமைக்கவும், கரும்பு ஆலைத் துறையை மேம்படுத்தவும், கிராமப்புற மேம்பாட்டுக்கும் ஃபிஜிக்கு 80 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.495 கோடி) கடன் வழங்கப்படும்.
 
இந்தியாவும் ஃபிஜியும் தங்கள் ராணுவ, பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த முடிவு செய்துள்ளன. மேலும், ஃபிஜி, குக் தீவுகள், டோங்கா, டுவாலு, நௌரு குடியரசு, கிரிபாடி குடியரசு, வனுவாடு, சாலமன் தீவுகள், சமோவா, நீயு, பலாவ் குடியரசு, மைக்ரோனேசியா, மார்ஷல் தீவுகள் குடியரசு, பாப்புவா நியூகினியா ஆகிய 14 பசிஃபிக் தீவு நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளுக்கும் இந்தியாவுக்கு வந்த பின் விசா பெற்றுக் கொள்ளும் வசதி செய்து தரப்படும்.
 
ஃபிஜி நாடாளுமன்றத்தில் நூலகம் அமைப்பு உள்ளிட்ட திட்டங்களுக்கும் நிதியுதவி செய்யப்படும். தவிர, ஃபிஜியைச் சேர்ந்தவர்களுக்கு இந்தியாவில் கல்வி உதவித்தொகைகள் இரட்டிப்பாக்கப்படும். இந்தியாவுக்கும், பசிஃபிக் தீவு நாடுகளுக்கும் இடையில் வர்த்தகத்தை ஊக்குவிக்கும் வகையில் தில்லியில் வர்த்தக அலுவலகம் ஒன்றை இந்த நாடுகள் திறப்பதற்கு உதவ இந்தியா தயாராக உள்ளது என்றார் மோடி.
 
முன்னதாக, இத்திட்டங்களுக்கான ஒப்பந்தங்கள் மோடிக்கும் பைனிமராமா முன்னிலையில் இரு தரப்பு அதிகாரிகள் இடையே கையெழுத்தாகின.
 
இந்நிலையில், ஃபிஜி பிரதமர் பைனிமராமா, செய்தியாளர்களிடம் கூறுகையில், “இந்தியப் பிரதமரின் வருகையானது, இரு நாடுகளுக்கும் இடையிலான ஆக்கபூர்வமான உறவுக்கான அடித்தளத்தை அமைத்துள்ளது. ஃபிஜியின் எதிர்காலத்தில் இந்தியாவைக் கூட்டாளியாகக் கொண்டிருப்பதில் பெருமிதம் கொள்கிறோம்“ என்றார்.
 
இதனிடையே, ஃபிஜி உள்பட 14 பசிஃபிக் நாடுகளின் தலைவர்களை மோடி சந்தித்துப் பேசினார். அந்த நாடுகளில் சமூகநலத் திட்டங்களை மேற்கொள்வதற்கு இந்திய நிதியுதவியை அவர் அறிவித்தார். பின்னர், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அந்நாட்டு தேசியப் பல்கலைக்கழகத்துச் சென்ற மோடி, அங்கு மாணவர்களிடையே பேசினார்.
 
மங்கள்யான் திட்டம்: ஃபிஜி நாடாளுமன்றத்தில் மோடி உரை நிகழ்த்துகையில், செவ்வாய்க் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக இந்தியா உருவாக்கிய மங்கள்யான் விண்கலத் திட்டத்தில் உதவியதற்காக ஃபிஜிக்கு நன்றி தெரிவித்தார்.
 
இதைத் தொடர்ந்து தனது 10 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை நாடு திரும்பினார். அவரை டெல்லி விமான நிலையத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், மற்றும் மூத்த தலைவர்கள் வரவேற்றனர்.