டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகுகிறார் என். சந்திரசேகரன்.. என்ன காரணம்?
டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக என். சந்திரசேகரன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், டாடா குழுமத்தில் தனது 40 ஆண்டுகால பணிவாழ்வை நிறைவு செய்வதாக தெரிவித்துள்ளார்.
டாடா சன்ஸ் தலைவராக இவரது தற்போதைய பதவிக்காலம் 2027 பிப்ரவரி 20 அன்று முடிவடைகிறது. இவரது பதவிக்காலத்தை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்க அறக்கட்டளைகள் பரிந்துரைத்த போதிலும், கடந்த பிப்ரவரி 24 அன்று நடைபெற்ற நிர்வாகக் குழு கூட்டத்தில் ஒருமனதாக முடிவு எட்டப்படவில்லை. நிர்வாக குழு உறுப்பினர் ஒருவர் இதற்கு ஆதரவு தெரிவிக்காததால் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை.
ஆறு மாதங்கள் கடந்தும் இறுதி முடிவு எட்டப்படாத நிலையில், 2027 பிப்ரவரிக்கு பிறகும் குழுமத்தை வழிநடத்த தெளிவான தலைமை அவசியம் என குறிப்பிட்டுள்ளார். தற்போதைய சூழலில், தனது பதவிக்காலம் முடியும் போது மீண்டும் அப்ப பதவிக்கு போட்டியிடவோ அல்லது ஏற்கவோ விரும்பவில்லை என நிர்வாக குழுவிடம் அவர் தெரிவித்துள்ளார்.
சுமுகமான தலைமை மாற்றத்தை உறுதி செய்யும் வகையில், அடுத்தகட்ட தலைமைத்துவம் குறித்து விரைவில் முடிவெடுக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Edited by Siva
